கரூர்: போலீஸ் காவல் விசாரணை முடிந்து கரூர் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்ட யூடியூபர் சவுக்கு சங்கருக்கு ஜூலை 23-ம் தேதி வரை நீதிமன்றக் காவலை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.
கரூரைச் சேர்ந்த கிருஷ்ணன் (43) கரூரில் பிரியாணிக் கடை நடத்தி வருகிறார். இவர் சென்னையைச் சேர்ந்த விக்னேஷிடம் ஆன்லைன் வர்த்தகம் செய்வதற்காக ரூ.7 லட்சம் அளித்துள்ளார். இரண்டு மூன்று மாதங்களில் லாபத்துடன் பணத்தை தருவதாக கூறிய விக்னேஷ் சொன்னபடி அந்தப் பணத்தைக் கொடுக்கவில்லை. இதுகுறித்து கிருஷ்ணன் அவரைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, தகாத வார்த்தைகளால் திட்டி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். விக்னேஷ் கடந்த ஜூன் 5-ம் தேதி கரூர் வந்தபோது கிருஷ்ணன் அவரை நேரில் சந்தித்து பணத்தைக் கேட்டுள்ளார்.
அப்போதும் தகாத வார்த்தைகளால் திட்டி, கொலை மிரட்டல் விடுத்த விக்னேஷ், கிருஷ்ணனை கல்லால் தாக்கியுள்ளார். இதில் காயமடைந்து கிருஷ்ணன், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, கரூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். விக்னேஷ் மீது மோசடி, தகாத வார்த்தைகளால் திட்டுதல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் கரூர் நகர போலீஸார் வழக்கும் பதிவு செய்தனர்.
இவ்வழக்கில் விக்னேஷ் கைது செய்யப்பட்ட நிலையில், அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் சவுக்கு சங்கர் இந்த வழக்கில் 2-வது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டார். இதையடுத்து, இந்த வழக்கில் சவுக்கு சங்கரையும் கைது செய்த கரூர் போலீஸார், கடந்த 9-ம் தேதி கரூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதையடுத்து, அவரை 7 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க போலீஸார் மனு செய்தனர். ஆனால், போலீஸாருக்கு 4 நாட்கள் மட்டும் அனுமதி வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.
இதையடுத்து சவுக்கு சங்கரை போலீஸ் காவலில் விசாரணைக்கு எடுத்த கரூர் போலீஸார், 4 நாள் விசாரணை முடிந்து கரூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் எண் 1-ல் இன்று (ஜூலை 13) மதியம் மணிக்கு ஆஜர்படுத்தினர். அப்போது, சவுக்கு சங்கரின் நீதிமன்றக் காவலை ஜூலை 23-ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.
இதையடுத்து சவுக்கு சங்கர் சென்னை புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சவுக்கு சங்கரின் வழக்கறிஞர் கரிகாலன், “சென்னை புழல் சிறையில் சவுக்கு சங்கருக்கு உரிய சிகிச்சை வழங்கப்படவில்லை. கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடத்திய சோதனையில் அவருக்கு சர்க்கரை அளவு 400 இருந்துள்ளது.
சென்னை புழலில் அவருக்கு சிகிச்சையோ சர்க்கரை நோயாளிக்கான உணவு வழங்கப்படவில்லை. கரூரில் தான் மாத்திரைகளும் உரிய உணவும் வழங்கப்பட்டது. மேலும் இந்த வழக்கில், புகார் அளித்தவர் யாரென்று சவுக்கு சங்கருக்குத் தெரியாது. சவுக்கு சங்கரால் தான் செந்தில் பாலாஜி சிறையில் இருக்கிறார் என்ற காழ்ப்புணர்ச்சி காரணமாக பதிவு செய்யப்பட்ட பொய் வழக்கு இது. இப்படி அவர் மீது தமிழகம் முழுவதும் 27 பொய் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ஒரு வழக்கில் மட்டும் பிணை வழங்கப்பட்டுள்ளது. இவ்வழக்கிலும் பிணை கோரியுள்ளோம்,” என்று அவர் கூறினார்.