சவுக்கு சங்கர் மீதான குண்டர் தடுப்பு சட்டத்தை ரத்து செய்யக் கோரிய மனு மீது வெள்ளிக்கிழமை தீர்ப்பு | Judgment tomorrow on the plea seeking cancellation of the goondas Act against Shavukku Shankar

1292229.jpg
Spread the love

சென்னை: யூடியூபரான சவுக்கு சங்கர் மீதான குண்டர் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்யக் கோரி அவரது தாயார் தொடர்ந்த வழக்கில் உயர் நீதிமன்றம் நாளை (ஆக.9) காலை தீர்ப்பளிக்கிறது. இதனிடையே சவுக்கு சங்கர் மீதான 17 வழக்குகளும் ஒரே குற்ற சம்பவத்துக்காக பதியப்பட்டதா என்பது குறித்து விளக்கமளிக்க காவல் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பெண் காவலர்கள் மற்றும் காவல் துறை பெண் அதிகாரிகளை அவதூறாக பேசியதாக யூடியூபர் சவுக்கு சங்கர் மீது கோவை சைபர் க்ரைம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர். அதன் தொடர்ச்சியாக அவர் மீது சென்னை, கன்னியாகுமரி, திண்டுக்கல், நீலகிரி என தமிழகம் முழுவதும் 16 காவல் நிலையங்களில் இதே குற்றச்சாட்டுக்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதேபோல சவுக்கு சங்கர் மீது வேறு சில குற்றச்சாட்டுகளுக்காகவும் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், சவுக்கு சங்கரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைத்து சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டார். இதை எதிர்த்து அவரது தாயார் கமலா தொடர்ந்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், வி. சிவஞானம் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கில் நாளை (ஆக.9) காலை தீர்ப்பளிக்கவுள்ளனர்.

பெண் காவலர்களை அவதூறாக பேசியதாக பதியப்பட்டுள்ள 17 வழக்குகளையும் ஒன்றாக சேர்த்து விசாரிக்கக் கோரி சவுக்கு சங்கர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனியாக ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ஒரே குற்றச்சாட்டுக்காக 17 வழக்குகளை பதிவு செய்துள்ள போலீஸார், அந்த வழக்கு விசாரணைக்காக ஊர், ஊராக தன்னை அழைத்துச் சென்று அலைக்கழித்து வருகின்றனர். எனவே, அந்த 17 வழக்குகளையும் ஒன்றாக சேர்த்து விசாரிக்க வேண்டும். மேலும், அந்த வழக்குகளின் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பாக வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, சவுக்கு சங்கர் தரப்பில், சில வழக்குகளில் ஜாமீன் பெற்றுள்ள நிலையில், சில வழக்குகளில் இன்னும் போலீஸாரால் கைது செய்யப்படவில்லை. எனவே, கைது செய்யப்படாத வழக்குகளில் தன்னை கைது செய்ய தடை விதிக்க வேண்டும் என கோரப்பட்டது.

காவல் துறை தரப்பில், சவுக்கு சங்கருக்கு எதிராக பதியப்பட்டுள்ள இந்த 17 வழக்குகளும் ஒரே குற்ற சம்பவத்துடன் தொடர்புடையதா என்பதை சரிபார்க்க வேண்டியுள்ளதால், அதற்கு அவகாசம் வழங்க வேண்டும் எனக் கோரப்பட்டது. இதையேற்ற நீதிபதி, சவுக்கு சங்கர் மீது பதியப்பட்டுள்ள இந்த 17 வழக்குகளும் ஒரே சம்பவத்துக்காக பதியப்பட்டதா என்பது குறித்து காவல் துறை தரப்பில் விளக்கமளிக்க மூன்று வாரங்கள் அவகாசம் வழங்கி உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *