இயக்குநர் பாயல் கபாடியா இயக்கிய ‘ஆல் வி இமேஜின் அஸ் லைட்’ திரைப்படம் கோல்டன் குளோப் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
சிறந்த இயக்குநர், சிறந்த வெளிநாட்டுத் திரைப்படம் ஆகிய இரு பிரிவுகளில் கோல்டன் குளோப் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவைச் சேர்ந்த இயக்குநர் ஒருவர், சிறந்த இயக்குநர் பிரிவில், கோல்டன் குளோப் விருதுக்கு பரிந்துரையாகியுள்ளது இதுவே முதல்முறையாகும்.
மும்பையைச் சேர்ந்த பாயல் கபாடியா இயக்கிய திரைப்படம் ‘ஆல் வி இமேஜின் அஸ் லைட்’. உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இப்படம், நவ. 22ஆம் தேதி இந்தியா முழுவதும் வெளியானது.
இப்படத்தில் கனி குஸ்ருதி, திவ்யா பிரபா, சாயா கதம், ஹ்ருது ஹாரூன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இந்தோ-பிரெஞ்சு கூட்டுத் தயாரிப்பாக உருவான இப்படத்தின் இந்திய விநியோக உரிமையை ராணா டகுபதியின் ஸ்பிரிட் மீடியா நிறுவனம் பெற்றுள்ளது.
பிரான்ஸில் நடைபெற்ற 77-வது கான் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு உயரிய விருதான கிராண்ட் பிரிக்ஸ் விருதை ‘ஆல் வி இமேஜின் அஸ் லைட்’ படம் வென்றது.
இதனைத் தொடர்ந்து மற்றோரு சாதனையாக கோல்டன் குளோப் விருதுக்கும் இப்படம் சிறந்த இயக்குநர் பிரிவில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மேலும் சிறந்த வெளிநாட்டு திரைப்படம் என்ற பிரிவிலும் பரிந்துரையாகியுள்ளது.
கோல்டன் குளோப் விருது வழங்கும் விழா, 2025 ஜனவரி 6ஆம் தேதி காலை (இந்திய நேரப்படி காலை 6.30) தொடங்கவுள்ளது.