ஒருவர் வாழ்க்கையில் உயர்வு பெற, பூர்வீக சொத்துக்கள், தந்தையால் உயர்வு, அன்பான குடும்பம், குழந்தைப் பாக்கியம், உயர்நிலை படிப்பு, தொழிலில் வெற்றி, சொந்த வீடு, அரசியலில் நுழைதல் என்று பல்வேறு செயல்களை செய்ய நமக்குக் கொடுப்பினையும் அதிர்ஷ்டமும் தேவை.
அவரவர் ஜாதத்தில் இந்த அதிர்ஷ்டத்தின் அளவு ஒன்பதாம் பாவம் சொல்லிவிடும். காலபுருஷ தத்துவப்படி 9ம் பாவம் என்பது தனுசு ராசி. இங்குதான் தேவ குரு ஆட்சியாகவும் மூலதிரிக்கோணம் பெற்று பலமுடன் இருப்பார். தனுசு ராசி / லக்கின ஜாதகத்தில் குரு ஆட்சியோ, சுப கிரக சேர்க்கை பெற்று வலுத்து இருந்தால் அதிர்ஷ்டமுடன் அவர்களின் பாக்கியமும் அவர்களைத் தேடிவரும். ஆனால் அங்கு அசுப கிரக பார்வை சேர்க்கை இருந்தால் பலனே மாறிவிடும். இங்குள்ள சின்னம், வில் அம்பை எய்வதற்குத் தயாராக இருக்கும் நிலை மற்றும் ஒரு மனிதனின் தலை மற்றும் உடலும், குதிரையின் உடலும் கொண்ட ஒரு கலவையான உருவம். சின்னத்தின் சூட்சும விதியே, இந்த ராசிக்காரர்கள் குறிவைத்து இலக்கை தாக்கும் போராளி குணம் கொண்டவர்கள்.
இவற்றை லக்கினமோ ராசியோ கொண்டவர்கள் இந்த பிரபஞ்சத்தில் சாதிக்கப் பிறந்த நபராக இருப்பார்கள். இவர்களுக்கு குருவின் கடாட்சமும் குலசாமியின் அருளும் இருக்கும். இதனால் இவர்களிடம் பூர்வீக சொத்துக்கும், செல்வ வளத்திற்கும் பஞ்சம் இருக்காது. ஆனால் அந்த செல்வத்தை அனுபவிக்க முடியுமா முடியாதா என்று அதை மற்ற கிரகங்களின் சுப மற்றும் அசுப தன்மை பொறுத்து மாறுபடும். எடுத்துக்காட்டக வெளியூர் செல்ல பல்வேறு முறையில் போராடுவார்கள். ஆனால் அவர்களுக்கு அந்த பாக்கியம் கடைசி நேரத்தில் கிட்டாது. காரணம் அவருக்கு ஆகாயத்தைக் குறிக்கும் கிரகமான குரு, ராகுவும் 12 பாவத்தோடு தொடர்பு பெறாமல் இருக்கும்.
தனுசு ராசியில் பலமிக்க கிரகங்களான கேதுவின் நட்சத்திரமான மூலம், சுக்கிரன் நட்சத்திரமான பூராடம், சூரியன் நட்சத்திரமான உத்திராடம் 1ம் பாதம் அமைந்துள்ளது. ஒருவர் எந்த லக்னமாக இருந்தாலும் பூராடம் 3, உத்திராடம் 1ம் பாதத்தில் அசுப கிரகங்கள் இருந்தாலும் அல்லது பயணித்தாலும் அந்த கிரகம் முடிந்தவரை நற்பலன்களைச் செய்யும் என்பது ஜோதிட சூட்சமம். இந்த ஆண் ராசியான தனுசு ராசிக்காரர்கள், பெண்களாக இருந்தால் ஆண் பலத்தோடு இருப்பார்கள்.
இவர்களின் முக்கிய பலங்கள் என்றால் அசாத்திய உடல் வலிமை, அறிவாளி, உயர் கல்வி, குறிக்கோளை நோக்கி பயணம், பகுத்தறிவு, உற்சாகமிக்கவர், சுயமரியாதை மிக்கவர்கள், தர்ம சிந்தனை, செல்வம் ஈட்டுவதில் ஆர்வம், மற்ற உயிரினங்கள் மீது அன்பு, குரு பக்தி, பேச்சில் நீதி நியாயம், பாடம் நடத்துவதில் வல்லவர்கள், வெளிநாட்டு மோகம் என்று நிறைய பொது பலன்கள் சொல்லிக்கொண்டே போகலாம். இவர்கள் நினைக்கும் காரியத்தில் கண்ணாக இருந்து வெற்றி அடையவும் செய்வார்கள். ஆனால் இவர்களுக்குச் சரியான குருவின் வழிகாட்டுதலும் தேவைப்படும். ஒருவருக்கு பாவ கிரகங்கள் சேர்க்கை இருந்தால், அந்த ஜாதகர் அவர்களின் குறிக்கோளை அடைய எந்த விதமான செயல்களையும் செய்யத் தயாராக இருப்பார்கள்.
பஞ்சபூத தத்துவப்படி இது நெருப்பு ராசி. நெருப்பின் தன்மை அதிகம் இருப்பதால் இவர்களால் கோபத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் வார்த்தைகளைத் தவறாகப் பயன்படுத்த நேரிடும். இவர்களின் பேச்சு மற்றவர்கள் மனதைப் புண்படுத்தும் என்பதைத் தெரியாமல் பேசிவிடுவார்கள். அதனால் இவர்களிடம் ஒரு சிலர் உண்மை பேசுவதைக் குறைத்துக் கொள்வார்கள். தனுசு உபய ராசி என்பதால் ஒரே நேரத்தில் அம்பியாகவும் அந்நியனாகவும் மாறும் இரட்டை குணம்.
இதுதவிர யாரையும் எளிதில் மன்னிக்க மாட்டார்கள், உறவுகளில் பிரிவு, அதிகாரம், சிறிது சுயநலம், சண்டை கோழி, கொஞ்சம் அடம், ஒரு சிலர் தாந்தரீகத்தில் ஆர்வம் இருக்கும். இவர்களால் நன்மை அடைந்தவர்கள் அதிகம், ஆனால் அந்த நன்மையை அந்த நபரிடம் சொல்லிக்காட்டவும் செய்வார்கள். இதுவே குடும்பத்தில் ஒற்றுமையின்மை மற்றும் திருமண முறிவு ஏற்பட வாய்ப்புக்கள் அதிகம். இங்குச் சொல்லப்பட்ட அனைத்துமே பொது பலன்கள். அவரவர் ஜோதிட கட்டத்தில் உள்ள கிரகங்கள் பொறுத்து பலன்கள் மாறுபடும்.
“பகருவேன் புந்தியுமே பகையுமாவர்.
சீரப்பா சென்னல் விளை பூமிதோப்பும்
சிவசிவா செம்பொன்னும் சேதமாகும்
நீரப்பா நெடுமாலும் கோணமேற
நீணிலத்தில் பேர்விளங்கும் நிதியுமுள்ளோன்
ஆரப்பா போகருட கடாக்ஷத்தாலே
அப்பனே புலிப்பாணி பாடினேனே”
சிறு விளக்கம்: தனுசு லக்கினகாரர்கள் புதன் பகையானவர். அவரால், செம்பொன்விளையும் பூமியும், தோப்பு துரவுகளும் பூர்வ புண்யவசத்தால் பெற்ற அருந்திரவியங்கள் அனைத்தையும் சேதம் அடையச் செய்வார். ஆனால் அதே புதன் 1,5,9 ஸ்தானத்தில் வீற்றிருப்பின் சிறந்த பூமியில் தன் பெயர் விளங்கக்கூடிய பெருநிதி படைத்தவனாக அந்த ஜாதகன் இருப்பான். புலிப்பாணி சூட்ச கூற்றுப்படி தனுசுவிற்கு புதன் பாதகாதிபதி மற்றும் யோகமில்லாதவர். புதன் கேந்திர ஸ்தானங்களான 7,10 அதிபதிகள் மற்றும் சொத்து சுகம் என்று சொல்லும் இடமான மீனத்தில் புதன் நீச்சமாகிறார். இவர் கேந்திர ஸ்தானத்தில் இருக்கும்பொழுது தோஷத்தை அதிகம் ஏற்படுத்துவார். அதாவது திருமண பந்தத்தில் பிரச்னை, தாயின் உறவுகளால் பிரிவு, தொழிலில் நஷ்டம் மற்றும் ஒரு சில நேரங்களில் சேமித்த அனைத்து செல்வங்களும் இழக்க நேரிடும். ஆனால் அதே புத பகவான் திரிகோணத்தில் இருந்தால் இவர்கள் புத்திசாலித் தனத்தால் உயர்வு பெறுவார்கள். எடுத்துக்காட்டாக: புதன் தோஷத்தைத் தரும்பொழுது, ஜாதகரை தொழிலில் வெற்றி பெறவும் செய்து பின்பு தன் புத்தியால் அவரை தவறான முடிவுகளை எடுக்க வைத்து தொழிலில் நஷ்டத்தையும் ஏற்படுத்துவார். இவர்களால் சமநிலையில் இருக்க முடியாது.
அஷ்டமம் என்பது மிகுந்த பாதகத்தையும், மரண பயத்தையும் தரவல்லது. சந்திரன் தனுசுவிற்கு அஷ்டமாதிபதி என்பதால் மனதைப் பாதிக்கும் எதாவது அசம்பாவிதம் கூடிய பிரச்னையை ஏற்படுத்தும். இந்த மன அழுத்தம் அவரவர் தசா புத்தி காலத்தில் ஏற்படும். இக்கால கட்டத்தில் அவர் ஜாக்கிரதையாகச் செயல்பட வேண்டும். குருவிற்கு செவ்வாய் நண்பர், அவர் 5-க்கும் 12-க்கும் உரியவர். செவ்வாய் 2ல் உச்சமாகவும், அஷ்டமத்தில் நீச்சமாகவும் இருப்பது ஒரு சில நற்பயன்களை தரவல்லது. செவ்வாய் சுப தன்மையுடன் இருந்தால் வெளிநாட்டுக்குச் சென்று புதியவற்றை கற்று மற்றவர்களுக்கும் சொல்லியும் கொடுப்பார். அவர்களின் மூதாதையர்கள் ஆசீர்வாதத்துடன் அனைத்து பூரண பாக்கியங்களும் கிட்டும். இவர்களுக்கு ராணுவம், ரியல் எஸ்டேட், அறிவியல், ஆராய்ச்சி துறையில் ஈடுபாடு அதிகம்.
தனுசுவிற்கு சனி பகவான் 2,3-க்கும் உரியவர். அவர் பூர்வ புண்ணியமான 5ம் வீட்டில் நீச்சம் பெறுகிறார். இவர் பேச்சில் துடுக்கு தனம் இருக்கும். செயலில் முயற்சி என்பது தனுசுவின் முக்கிய பலம். இவர்கள் நினைத்தது சரி என்ற கோணத்தில் பார்ப்பதால் மற்ற சரியான பாதை இவர்கள் கண்ணுக்குப் புலப்படாது. ஒரு சிலருக்கு 2வது களத்திரம் ஏற்பட வாய்ப்பு உண்டு. கர்மாவிற்கு பயந்து செயல்படுவது நன்று. முடிந்தவரை ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவுவது நற்பலன்களை தரும். அடுத்தது களத்திரகாரகன் சுக்கிரன் இவர்களுக்கு நட்பாகவும் இருப்பார் அவரே மாரகராகுவும் மாறுவார். சுக்கிரன் ஒருசில காலங்களில் செல்வம், புகழ், மகிழ்ச்சி என்ற நிலைக்கு எடுத்து செல்வார். ஆனால் அதேசமயம் ஒரு சில காலகட்டத்திற்குப் பிறகு ஒன்றும் இல்லை என்று நினைக்க வைப்பார். கூட்டுத் தொழில், திருமணம், காதல் என்ற விவகாரங்களில் சிறிது யோசித்துச் செயல்பட வேண்டும்.
ஆத்மகாரகன் சூரியன் நல்ல நிலையிலிருந்தால் பூர்வீக சொத்துக்கள் கிட்டும். அதுவே நல்ல நிலையில் இல்லை என்றால் தந்தையால் சுகம் கிட்டாது. ஒரு சிலருக்குத் தவறான குலசாமியை வழிப்பட நேரிடும். அதனால் இந்த ஜாதகருக்கு குலதெய்வம் ஆசீர்வாதம் கிட்டாமல் பூர்வீக சொத்தில் பிரச்னை, பித்ரு சாபம், குடும்பத்தில் தீர்க்க முடியாத குறைகள் இருந்து கொண்டே இருக்கும்.
வணங்க வேண்டிய தெய்வம்..
குலதெய்வம் கூடிய எல்லை சாமி, ஸ்ரீ ரங்கநாதர், ராமர், ஆஞ்சநேயர், சக்கரத்தாழ்வார் பிரகஸ்பதி மற்றும் யானை வாகனம் உள்ள அனைத்து தெய்வங்களையும் வழிபாடு செய்து நமஸ்கரிக்கவும். வியாழன் அன்று உங்களால் முடிந்த இனிப்பைச் செய்து வயதானவர்கள் மற்றும் ஆதரவற்றவர்களுக்குக் கொடுப்பது நன்று.
Whatsapp: 8939115647
vaideeshwra2013@gmail.com