‘‘சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாக சென்னையில் நாளை கலந்தாய்வு கூட்டம்’’: அன்புமணி தகவல் | Anbumani says consultative meeting to be held in Chennai on caste census issue in Tamil Nadu

1350187.jpg
Spread the love

சென்னை: தமிழ்நாட்டில் சமூகநீதிக்கு பெரும் ஆபத்து ஏற்பட்டுள்ள நிலையில், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படுவதை உறுதி செய்ய மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கை குறித்து சென்னையில் நாளை கலந்தாய்வுக் கூட்டம் நடைபெறவிருப்பதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தூங்குபவர்களை எழுப்பலாம்… ஆனால், தூங்குபவர்களைப் போல நடிப்பவர்களை எழுப்ப முடியாது என்பதைப் போலத் தான் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்துவதில் தமிழகத்தை ஆளும் திராவிட மாடல் அரசின் செயல்பாடுகள் உள்ளன. தமிழ்நாட்டில் 69% இட ஒதுக்கீடு உள்ளிட்ட சமூகநீதியை பாதுகாப்பதற்கு சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டியது மிகவும் இன்றியமையாத் தேவை என்பதை அறிந்தும் அந்தக் கடமையைச் செய்ய திமுக அரசு மறுப்பது கண்டிக்கத்தக்கதாகும்.

தமிழ்நாட்டின் இன்றையத் தனிப்பெரும் தேவை சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு தான். சமூக நீதி சார்ந்து தமிழ்நாடு மிகப்பெரிய அச்சுறுத்தலை எதிர்கொண்டு வருகிறது. இந்தியாவில் முதன்முறையாக, உச்சநீதிமன்றத்தின் ஆணையையும் மீறி, 69% இட ஒதுக்கீட்டை நாடாளுமன்ற சிறப்புச் சட்டத்தின்படி, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் ஒன்பதாவது அட்டவணையில் சேர்க்க வைத்து செயல்படுத்தி வரும் பெருமை தமிழ்நாட்டுக்கு உண்டு. ஆனால், அந்தப் பெருமை இப்போது ஆட்டம் கண்டு கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் 69% இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்படுவதை எதிர்த்து சமூகநீதிக்கு எதிரான சக்திகள் தொடர்ந்த வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் எப்போது வேண்டுமானாலும் விசாரணைக்கு வரக் கூடும்.

69% இட ஒதுக்கீட்டை எதிர்த்து 1994 ஆம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கில் 13.07.2010 ஆம் தீர்ப்பளித்த அப்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.எச்.கபாடியா தலைமையிலான அமர்வு, “69% இட ஒதுக்கீடு செல்லும். அதேநேரத்தில் ஓராண்டுக்குள் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி, அதனடிப்படையில் இட ஒதுக்கீட்டின் அளவை தீர்மானிக்க வேண்டும்” என்று ஆணையிட்டது.

ஆனால், அப்போதிருந்த தமிழக அரசுகள் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தாமல் இட ஒதுக்கீட்டை உறுதி செய்ததால், 69% இட ஒதுக்கீட்டை எதிர்த்து சிலர் 2012-ஆம் ஆண்டில் மீண்டும் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், 69% இட ஒதுக்கீட்டை எவ்வாறு நியாயப்படுத்த முடியும்? என்று வினா எழுப்பினர். அந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும் போது, தமிழ்நாட்டில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் மக்கள் தொகை 68%க்கும் அதிகம் என்பதை ஆதாரங்களுடன் அரசு நிரூபிக்க வேண்டும்.

அவ்வாறு நிரூபிக்காவிட்டால், தமிழ்நாட்டில் 69% இட ஒதுக்கீடு செல்லாது என்று தீர்ப்பளிப்பதற்கான ஆபத்து இருக்கிறது. அந்த ஆபத்தை முடியடிப்பதற்கான ஒரே வழி சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவது தான். அவ்வாறு சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவது மிகவும் எளிதானது என்பது மட்டுமின்றி, உச்சநீதிமன்றத்தாலும், உயர்நீதிமன்றங்களாலும் ஏற்றுக்கொள்ளத்தக்கவை தான் என்பதை அண்மையில் பிகாரிலும், தெலுங்கானாவிலும் நடத்தப்பட்ட சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்புகள் உறுதி செய்திருக்கின்றன. ஆனால், திமுக அரசு மட்டும் தான் அதை புரிந்து கொள்ளவும், ஏற்கவும் மறுக்கிறது.

தமிழ்நாட்டை ஆளும் திமுக அங்கம் வகிக்கும் இந்தியா கூட்டணியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தி உள்ளிட்ட சட்டம் தெரிந்தவர்களும், சமூகநீதியில் அக்கறை கொண்டவர்களும், சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு என்பதை ஏற்றுக்கொள்கிறார்கள். ஆனால், அதற்கான அதிகாரம் தங்களுக்கு இல்லை என்ற பழைய பல்லவியையே தமிழக ஆட்சியாளர்கள் மீண்டும், மீண்டும் பாடிக் கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு சமுகநீதியில் இம்மியளவும் அக்கறையில்லை.

இத்தகைய சூழலில் தான் தமிழ்நாட்டில் சமூகநீதியை நிலை நிறுத்துவதற்காக சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தும் விவகாரத்தில் அடுத்து செய்ய வேண்டியது என்ன? என்ற வினா எழுந்திருக்கிறது. இது குறித்து சமூகநீதியில் அக்கறை கொண்டவர்களுடன் விவாதிப்பதற்கான கலந்தாய்வுக் கூட்டத்தை பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் வழக்கறிஞர்கள் சமூகநீதிப் பேரவை ஏற்பாடு செய்திருக்கிறது.

சென்னை தியாகராயர் நகர் ஜி.என். செட்டி சாலையில் உள்ள அக்கார்ட் விடுதியில் நாளை, பிப்ரவரி 10 ஆம் தேதி காலை 10.30 மணிக்கு நடைபெறவுள்ள இந்தக் கலந்தாய்வுக் கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராகிய நான், புரட்சி பாரதம் கட்சித் தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி, புதிய நீதிக் கட்சியின் பொதுச்செயலாளர் டாக்டர் கோ.சமரசம், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் பெ.ஜான்பாண்டியன், இந்திய ஜனநாயகக் கட்சியின் தலைவர் இரவி பச்சமுத்து, நாடார் மகாஜன சங்கத் தலைவர் கரிக்கோல் ராஜன், யாதவ மகாசபை சங்கத்தின் தலைவர் நாசே இராமச்சந்திரன், தென்னிந்திய பார்வர்டு தலைவர் திருமாறன்ஜி, கொங்கு மக்கள் முன்னணியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் ஆறுமுகம் கவுண்டர், தமிழர் தேசம் கட்சித் தலைவர் கே.கே.எஸ் செல்வக்குமார், அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் பொருளாளர் ஸ்ரீவை சுரேஷ் தேவர், வழக்கறிஞர் சமூகநீதிப் பேரவையின் தலைவர் வழக்கறிஞர் பாலு மற்றும் பல்வேறு அரசியல் மற்றும் சமூக அமைப்புகளின் தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

தமிழ்நாட்டில் சமூகநீதிக்கு பெரும் ஆபத்து ஏற்பட்டுள்ள நிலையில், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப் படுவதை உறுதி செய்ய மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கை குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதித்து மிகவும் முக்கியமான முடிவுகள் எடுக்கப்படவிருக்கின்றன என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *