மகாராஷ்டிர முதல்வராக 3வது முறையாக பாஜகவின் தேவேந்திர ஃபட்னவீஸ் இன்று பதவியேற்றார். துணை முதல்வர்களாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜீத் பவாரும், சிவசேனை கட்சித் தலைவர் ஏக்நாத் ஷிண்டேவும் இன்று (டிச. 5) பொறுப்பேற்றுக்கொண்டனர்.
இந்நிலையில், முதல்வரான பிறகு மும்பையில் செய்தியாளர்களிடம் ஃபட்னவீஸ் பேசியதாவது,
”அதிக அளவிலான குற்றச்சாட்டுகள் எழும் துறையாக உள் துறை உள்ளது. ஆனால், நம்பிக்கையுடன் இந்தத் துறையை நாங்கள் கையாண்டோம். இம்முறையும் சட்டம் – ஒழுங்கு கெடாத வகையில் கையாள்வோம். மகாராஷ்டிர மக்கள் பாதுகாப்பான உணர்கின்றனர். சாதிவாரி கணக்கெடுப்புக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல என்பதை திரும்பத் திரும்ப கூறுகிறோம்.
முதல்முறை சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது பிகாரில்தான்; அதுவும் எங்கள் ஆதரவுடன் நடந்தது. சாதிவாரி கணக்கெடுப்பை ஆயுதமாக்க வேண்டாம். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டால், அதன் முடிவுகளில் இருந்து நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை முடிவு செய்வோம். இதை அரசியல் ஆயுதமாக்கினால் சமூகத்தில் பெரிய சிதைவுக்கு வழிவகுக்கும்.
மகாராஷ்டிரத்திற்கான முதலீடுகள் அனைத்தும் குஜராத்துக்குச் செல்வதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. ஆனால், கடந்த ஆண்டு மட்டும் மகாராஷ்டிரத்துக்கு வெளிநாட்டு முதலீடுகள் 90 சதவீதம் கிடைத்துள்ளன.
எதிர்க்கட்சிகளுக்கு தரவுகளுடன் இதனைக் கூறி வருகிறோம். தொழில்துறைகளின் பெயர்களை விரைவில் அறிவிக்கிறேன். மகாராஷ்டிர மக்களை மகிழ்ச்சி அடையச்செய்யும் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன” எனக் குறிப்பிட்டார்.
இதையும் படிக்க | ஃபட்னவீஸின் வெற்றிக்கான ரகசியம் என்ன..? மனைவி கூறியவை!