“சாதி ஆணவ படுகொலை தடுப்புக்கான ஆணையமும் கண்துடைப்பே” – அண்ணாமலை குற்றச்சாட்டு | Commission to Prevent Caste Honour Killing is an eyewash – Annamalai alleges

1380104
Spread the love

சென்னை: “சாதி ஆணவப் படுகொலையைத் தடுக்க அமைக்கப்பட்டுள்ள ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி கே.என்.பாஷா தலைமையிலான ஆணையம் கண்துடைப்பு. இதன்மூலம் மக்கள் வரிப்பணத்தை முதல்வர் வீணடிக்கிறார்” என்று பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “தமிழகத்தில், திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து, பட்டியல் மற்றும் பழங்குடி சமூக மக்களுக்கெதிரான வன்முறை, 2021-ஆம் ஆண்டிலிருந்து, 2023-ஆம் ஆண்டு வரை, மூன்று ஆண்டுகளில், 68% அதிகரித்திருப்பதாக, சமீபத்தில் வெளியான புள்ளிவிவரங்கள் மூலம் தெரிய வந்தது. இந்தக் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது எந்தக் கடுமையான நடவடிக்கையும் எடுக்காமல், பாதிக்கப்படுபவர்களுக்கு உரிய இழப்பீடும் வழங்காமல் அலைக்கழித்து வருகிறது திமுக அரசு.

இந்த நிலையில், சாதி ஆணவக் கொலைக்கு எதிராக தனிச்சட்டம் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையை, நான்கு ஆண்டுகளாகக் கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டு, தற்போது, ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைத்திருப்பதாக, சட்டசபையில் தெரிவித்திருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். ஏற்கெனவே, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்த, முதல்வர் தலைமையில் ஒரு குழு அறிவித்தார்கள். ஆறு மாதங்களுக்கு ஒருமுறை கூட வேண்டிய இந்தக் குழு, கடந்த நான்கு ஆண்டுகளில், வெறும் மூன்று முறையே கூடியிருக்கிறது. இந்தக் குழுவின் தலைவரான முதல்வர் இது குறித்து ஏன் பேச மறுக்கிறார்?

இது தவிர, மாவட்ட ஆட்சியாளர் தலைமையிலான குழு, காவல்துறை ஏடிஜிபி தலைமையிலான சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் குழு என, அனைத்துமே செயலற்று இருக்கையில், மீண்டும் ஒரு ஆணையம் அமைத்திருப்பது யாரை ஏமாற்ற? பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது திமுக அரசின் நோக்கமாகத் தெரியவில்லை. கண்துடைப்புக்காக, ஆணையம், குழு என அமைத்து மக்கள் வரிப்பணத்தை வீணடித்துக் கொண்டிருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். ஆட்சிக்கு வந்து நான்கரை ஆண்டுகளில் திமுக அமைத்த எண்ணற்ற குழுக்களால், இதுவரை தமிழக மக்களுக்குக் கிடைத்த நன்மை என்ன?” என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *