சில தினங்களுக்கு முன்பு, பவன் கல்யாண் நடித்திருந்த ‘உஸ்தத் பகத் சிங்’ படத்தின் புரோமோஷன் நிகழ்வில் நடிகர் பார்த்திபன் பேசிய விஷயம் சர்ச்சையாகி இருந்தது.
சாதி அற்றவர் என மேடைகளில் குறிப்பிடும் அவர் இப்படத்தின் நிகழ்வில் சாதி பெருமை பேசுகிறார் என அவர் மீது சமூக வலைதளப் பக்கங்களில் விமர்சனம் வைக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, இப்போது சாதி மதம் அற்றவன் என்கிற சான்றிதழ் வாங்குவதற்கு விண்ணப்பித்திருப்பதாகத் தெரிவித்திருக்கிறார். இதனை அவரின் யூடியூப் சேனல் காணொளி மூலம் தெரிவித்திருக்கிறார்.

அந்தக் காணொளியில் பார்த்திபன், “நான் என்னுடைய தந்தை மறைந்தபோதும், படங்களால் கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டபோதும் நான் இந்தளவுக்கு உடைந்துப் போனது கிடையாது.
கடந்த 7-8 நாட்களாக சமூக வலைதளப் பக்கங்கள் ஏற்படுத்திய பாதிப்பினால் உடைந்து போயிருக்கிறேன். நான் சமூகத்தையும், சமூக வலைதளப் பக்கங்களையும் பெரியளவில் மதிப்பதனால் அது என்னிடையே தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
நான் பிறந்ததிலிருந்து என்னுடைய பிறப்பு பற்றி நான் பெருமை கொண்டது கிடையாது. அதை வெறுப்பவன் நான். என்னுடைய படங்கள் மூலமாகவும் இதனைச் சொல்லி வந்திருக்கிறேன். சாதி தேவையில்லை என்பதை அழுத்தமாகச் சொல்லியிருக்கிறேன்.
என்னுடைய தாய் மொழி தெலுங்காக இருந்தும் நான் தமிழ் இத்தனை அழகாகப் பேசுகிறேன் என்பது வேண்டுமானால் எனக்கு பெருமையாக இருக்கலாம். இவ்வளவு அழகாக தமிழ் பேசுபவர் சாதி பெருமையைப் பேசுகிறார் எனச் சொல்லும்போது எனக்கு வருத்தமாக இருக்கிறது.
அதன் பின்னணியில் ஏதோ காரணம் இருப்பதாகச் சொல்லும்போது எனக்கு அவமானமாகவும் இருக்கிறது. அன்று, மேடையில் தெலுங்கில் பேசும்போது சரியாகப் பேச வேண்டும் எனப் பதற்றத்தில் இருந்தேன்.
அதனை பேப்பரிலும் எழுதிக் கொண்டு போனேன். பின்னிருந்து ஒருவர் சொன்னதைக் கேட்டு, பதற்றத்துடன் மேடையில் அந்த வார்த்தையை இரண்டு முறை சொல்லிவிட்டேன்.

அது இவ்வளவு பெரிய எதிர்வினையை ஏற்படுத்தும்போது என நினைக்கவில்லை. எனக்குள் அது உறுத்திக் கொண்டே இருந்தது. ஏனென்றால், நான் அப்படி கிடையாது.
சாதி இல்லை எனச் சொல்ல வேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பம். சாதி, மதம் இல்லை என்பது என்னுடைய விருப்பமாக இருக்கும்போது, அதை ஏன் சான்றிதழ்களில் மாற்றக் கூடாது என யோசித்தேன். அப்போதிருந்து முயற்சி செய்து, முறையாக இப்போது விண்ணப்பித்திருக்கிறேன்.
ஜி.ஓ கிடைத்தால், முதன் முதலில் திரையுலகில் சாதி மதம் அற்றவன் என்கிற சான்றிதழை வாங்குகிறேன் என்பது எனக்கு பெருமை. சாதி இல்லை எனச் சொல்வதுதான் எனக்கு பெருமை. நான் இந்தச் சாதியைச் சார்ந்தவன் எனச் சொல்வதில் எனக்கு பெருமை இல்லை” எனக் கூறியிருக்கிறார்.