சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ்ஸுடன் நெருக்கமாக உள்ள வழக்கறிஞர்களை கொலீஜியம் பரிந்துரைப்பதாகவும், இதில் சமூகநீதியை நிலைநாட்ட வேண்டும் எனவும் வி.சி.க தலைவர் எம்.பி தொல்.திருமாவளவன் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.
அந்த அறிக்கையில் திருமாவளவன், “சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் தொடர்ந்து பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ் ஆதரவு வழக்கறிஞர்கள் மட்டுமே இடம்பெறுவது நீதி நிர்வாக அமைப்பு சனாதன மயம் ஆகி வருவதைக் காட்டுகிறது.
இதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

தற்போது நீதிபதி நியமனத்துக்காக சென்னை உயர் நீதிமன்ற கொலீஜியத்தின் பரிசீலனையில் உள்ள பட்டியலில் ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் கூட இடம்பெறவில்லை என்று தெரியவந்துள்ளது.
இது மிகப்பெரிய அநீதியாகும். தற்போது சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள நீதிபதிகளில் பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர்களே அதிகமாக உள்ளனர்.
அதிலும் குறிப்பாக பா.ஜ.க ஆதரவாளர்கள் மட்டுமே தொடர்ந்து நீதிபதிகளாக நியமிக்கப்படுகின்றனர்.