திருவண்ணாமலை: கனமழை காரணமாக, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சாத்தனூர் அணையில் இருந்து தென்பெண்ணையாற்றில் விநாடிக்கு 13,000 கனஅடி தண்ணீர் இன்று (டிச.12) திறந்து விடப்படுகிறது. இதனால் திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் ஆகிய நான்கு மாவட்டங்களின் கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
ஃபெஞ்சல் புயல் தாக்குதலை தொடர்ந்து, காற்றழுத்த தாழ்வு பகுதியால், திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (டிச.12) அதிகாலையில் இருந்து மீண்டும் மழை பெய்து வருகிறது. இதனால், மாவட்டத்தில் முக்கிய அணையான சாத்தனூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், அணையில் இருந்து தென்பெண்ணையாற்றில் விநாடிக்கு 13 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. 119 அடி உயரம் உள்ள சாத்தனூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 6 மணி நிலவரப்படி 117.50 அடியாக இருந்தது. அணைக்கு வந்த, விநாடிக்கு 2,500 கனஅடி தண்ணீரும், தென் பெண்ணையாற்றில் முழுமையாக வெளியேற்றப்பட்டது. அணையில் 6,986 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது. அணைப் பகுதியில் 18.2 மி.மீ. மழை பெய்தது.
இந்நிலையில், கிருஷ்ணகிரி அணை மற்றும் பாம்பாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பது அதிகரிக்கப்பட்டதாலும், தென்பெண்ணையாறு நீர் பிடிப்பு பகுதியில் பெய்து வரும் கனமழையால் சாத்தனூர் அணைக்கு நீர்வரத்து கிடுகிடுவென அதிகரித்தது. விநாடிக்கு 2,500 கனஅடி நீர்வரத்து என்பது, பகல் 1 மணியளவில், விநாடிக்கு 8 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. இதனால், அணையில் இருந்து தென்பெண்ணையாற்றில் தண்ணீர் வெளியேற்றுவது படிப்படியாக விநாடிக்கு 5 ஆயிரம் கனஅடி, 10 ஆயிரம் கனஅடி, 13 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டது.
சாத்தனூர் அணையின் நீர்மட்டம் இன்று (டிச.12) காலை 6 மணி நிலவரப்படி 117.50 அடியாக இருந்தது. மொத்த கொள்ளளவில், ஒன்றரை அடி மட்டுமே குறைவாக இருந்தது. நீர்வரத்து தொடர்ந்ததால், அணையில் இருந்து தண்ணீரை வெளியேற்றப்பட்டது. இதனால் அணையின் நீர்மட்டம் 7 மணி நேரத்தில் அரை அடி குறைந்து 117 அடியாக இருந்தது. இதே நிலையை தொடர்ந்து பராமரிக்கப்பட்டன.
குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால், கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் கடந்த ஒரு வாரமாக எச்சரித்து வந்தபோதும், 119 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டத்தை முன்கூட்டியே குறைக்கவில்லை. அணையின் நீர்மட்டம் கடந்த ஒரு வாரமாக 117.95 அடியாக பராமரிக்கப்பட்டுள்ளது. முழு கொள்ளளவுக்கு ஒரு அடி மட்டுமே குறைவாக வைக்கப்பட்டிருந்தது.
இதன் எதிரொலியாக, அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியதும், அணையில் இருந்து தென்பெண்ணையாற்றில் வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. முன்கூட்டியே அணையின் நீர்மட்டத்தை, குறைந்தபட்சம் 4 அடி வரை குறைவாக வைத்திருந்தால், அணையில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்படுவதும், குறைவாகவே இருந்திருக்கும். இதேபோன்று, ஃபெஞ்சல் புயலுக்கு அதி கனமழை பெய்த போது, 117 அடி வரை நீர்மட்டம் இருந்ததால், ஒரே நேரத்தில் விநாடிக்கு 1.68 லட்சம் கனஅடி தண்ணீர் வெயியேற்றப்பட்டதால், 4 மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கியது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில், நீர்வளத் துறை வெளியிட்டுள்ள 6-வது வெள்ள அபாய எச்சரிக்கை செய்திக் குறிப்பில், “கிருஷ்ணகிரி அணை மற்றும் பாம்பாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பது அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் சாத்தனூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, அணையில் இருந்து தென்பெண்ணையாற்றில் படிப்படியாக தண்ணீர் திறப்பது அதிகரிக்கப்படும். திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் செல்லும் தென்பெண்ணையாறு கரையோர கிராமங்களில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. > வாசிக்க > 76 இடங்களில் கனமழை பதிவு: தமிழகத்தில் மழை குறையுமா? – பாலச்சந்திரன் விளக்கம்