சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் காவலருக்கு இடைக்கால பிணை வழங்கி சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தைச் சோ்ந்த வா்த்தகா் ஜெயராஜ், அவரது மகன் பெனிக்ஸ் ஆகியோரை விசாரணைக்காக காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று துன்புறுத்தி கொலை செய்த வழக்கில் காவல் ஆய்வாளா் ஸ்ரீதா் உள்ளிட்ட 10 போ் கைது செய்யப்பட்டனா். இவா்கள் கடந்த 4 ஆண்டுகளாக மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட காவலா் தாமஸ் பிரான்சிஸ் தனது தங்கையின் திருமணத்துக்கு இடைக்கால பிணை வழங்கக் கோரி சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தாா். இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ. நக்கீரன் முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.
இந்த மனு மீது நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
அப்போது, மனுதாரருக்கு ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 7) மாலை 4 மணி முதல் வருகிற 11-ஆம் தேதி மாலை 4 மணி வரை 4 நாள்கள் இடைக்கால பிணை வழங்கி நீதிபதி உத்தரவிட்டாா். மேலும், தினந்தோறும் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் அவா் முன்னிலையாகி கையொப்பமிட வேண்டும். சிறையிலிருந்து போலீஸாரின் பாதுகாப்போடு சென்று வருகிற 11-ஆம் தேதி மாலை 4 மணிக்கு சிறைக்குத் திரும்ப வேண்டும் என்றாா் நீதிபதி.