சாத்தான்குளம் வழக்கு: ”பிற அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்?”- ஹென்றி திபேன் கேள்வி

Spread the love

தந்தை, மகன் கொலை வழக்கில் கைதான 9 போலீஸ்காரர்களும் குற்றவாளிகள் என கடந்த மார்ச் 23-ந்தேதி, மதுரை மாவட்ட முதலாவது குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முத்துகுமரன் தீர்ப்பளித்தார். அவர்களுக்கான தண்டனை விவரம் கடந்த ஏப்ரல் 6-ம் தேதி வழங்கப்பட்டது. அதன்படி, இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 9 போலீஸ்காரர்களுக்கும் இரட்டை மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.  இந்தத் தீர்ப்பினை பல தரப்பினரும் வரவேற்றுக் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில், உண்மையை மறைக்க முயன்ற பிற அரசு அதிகாரிகள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என, மக்கள் கண்காணிப்பகத்தின் இயக்குநர் ஹென்றி திபேன் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஹென்றி திபேன்
ஹென்றி திபேன்

இதுகுறித்து அவரிடம் பேசினோம், “சாத்தான்குளம் நீதிமன்ற நடுவர் சரவணன் முன்னிலையில் இருவரும் ஆஜர்படுத்தபட்ட போது,  அவர் , இருவரையும் கோவில்பட்டி சிறையில் அடைக்க உத்தவிட்டார்.  தொடர்ந்து, இருவருக்கும் உடற்தகுதிச் சான்றிதழ்  பெற, சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது, அரசு மருத்துவர் வெண்ணிலா, சான்றிதழ் தர மறுத்துள்ளார். ஆய்வாளர் ஸ்ரீதரின்  வற்புறுத்தலால் 3 மணி நேரம் கழித்து சான்றிதழில் கையெழுத்து போட்டுள்ளார். அங்கிருந்து இருவரும் கோவில்பட்டி சிறையில் அடைக்கப்பட்டனர்.

 மருத்துவர் வெண்ணிலா யாரின் நிர்பந்தத்தில் உடல் தகுதிச்சான்றிதழ் வழங்கினார்? சாத்தான்குளத்தில் இருந்து அதிநவீன வசதிகளுடன் கூடிய  மாவட்ட மருத்துவமனையான தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பாமல் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கும், கோவில்பட்டி  கிளைச்சிறைக்கும் அனுப்பியது ஏன்? தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பப்பட்டிருந்தால் இருவரின் உயிராவது மிஞ்சியிருக்கும். அத்துடன் பணியில் இருந்த சாத்தான்குளம்,டி.எஸ்.பி., ஏ.டி.எஸ்.பி. மாவட்ட எஸ்.பியை ஏன் வழக்கில் சேர்க்கவில்லை. வெறும் இடமாற்றம் மட்டும் போதுமா? இந்த நிலையில்,  சிறையிலேயே அடுத்தடுத்த நாளில் உயிரிழந்தனர்.   ’பென்னிக்ஸ் நெஞ்சுவலியாலும், ஜெயராஜ் காய்ச்சலாலும் உயிரிழந்தார்’ என போலீஸார் தரப்பில் சொல்லப்பட்டது.   

சாத்தான்குளம் காவல் நிலையம்

இது சரியான காரணமில்லை என்பது ஊருக்கே தெரியும். இந்த வழக்கில் உண்மையை மறைக்க முயன்ற அரசு அதிகாரிகள் அனைவரின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.  உச்சநீதிமன்ற வழிகாட்டுதலையும், உயர்நீதிமன்றத் தீர்ப்பையும் மதிக்காமல் ’ரிமாண்ட்’க்கு உத்தரவிட்ட நீதிபதி மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் (ஜனநாயக வழக்கறிஞர்கள் சங்கம், சமத்துவ வழக்கறிஞர்கள் சங்கம், காங்கிரஸின் வழக்கறிஞர்கள் பிரிவு,  மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் ஆகிய நான்கு சங்கத்தைச் சேர்ந்த வழக்கறிஞர்கள்) கடந்த 2020-ம் ஆண்டு  ஜூலை 6-ம் தேதி உயர்நீதிமன்றம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *