சார் ஆய்வாளர் பணிக்கான வயது வரம்பை 33 ஆக உயர்த்த அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல் | Anbumani Ramadoss slams dmk govt

1357272.jpg
Spread the love

சென்னை: சார் ஆய்வாளர் பணிக்கான வயது வரம்பை 33 ஆக உயர்த்த வேண்டும் என்றும் காலியிடங்களின் எண்ணிக்கையை 2000 ஆக அதிகரிக்க வேண்டும் என்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தமிழக காவல்துறைக்கு 1299 சார் ஆய்வாளர்களை தேர்ந்தெடுப்பதற்காக ஆன்லைனில் விண்ணப்பிக்கும் நடைமுறை இன்று தொடங்கியிருக்கிறது. காவல்துறைக்கு கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டிருந்த ஆள்தேர்வு நடத்தப்படாத நிலையில், அதை கருத்தில் கொள்ளாமல் , நடப்பாண்டு ஜூலை ஒன்றாம் தேதியன்று 30 வயதுக்கும் குறைவாக இருப்பவர்கள் மட்டும் தான் இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க முடியும் என்று தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்திருக்கிறது. இது சமூகநீதிக்கு எதிரானது ஆகும்.

தமிழக காவல்துறையில் ஒவ்வொரு ஆண்டும் சில ஆயிரம் காவல் சார் ஆய்வாளர்கள் ஓய்வு பெறும் நிலையில், அதனால் ஏற்படும் காலியிடங்களை நிரப்ப ஒவ்வொரு ஆண்டும் ஆள்தேர்வு நடத்தப்பட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வருகிறது.

கடந்த ஆண்டு தொடக்கம் வரை காலியாக இருந்த சார்-ஆய்வாளர் பணியிடங்களை நிரப்ப 2024 ஜூன் மாதம் ஆள்தேர்வு அறிவிக்கை வெளியிடப்படும் என்று தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் கடந்த ஆண்டு மே மாதமே அறிவித்திருந்தது. ஆனால், அறிவித்தவாறு அறிவிக்கை வெளியாகவில்லை.

சார் ஆய்வாளர் பணிக்கான ஆள்தேர்வு அறிவிக்கை 10 மாதங்கள் தாமதமாக அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், அதற்கேற்ப வயதுவரம்பில் சலுகைகள் வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு செய்யப்படவில்லை. ஏற்கனவே அறிவிக்கப்பட்டவாறு கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஆள்தேர்வு அறிவிக்கை வெளியிடப்பட்டிருந்தால், கடந்த ஜூலை மாதம் 30 வயது நிறைவடைந்திருந்த இளைஞர்கள் ஆள்தேர்வில் பங்கேற்றிருப்பார்கள். அந்த வாய்ப்பை கடந்த ஆண்டு பறித்த தமிழக அரசு, இந்த ஆண்டு வழங்கும் வகையில் வயது வரம்பை குறைந்தது ஓராண்டாவது உயர்த்தியிருக்க வேண்டும்.

கடந்த ஆண்டில் காவல்துறைக்கு சார் ஆய்வாளர் தேர்வு நடத்தப்படாததை கடந்த ஜனவரி மாதம் 13-ஆம் நாள் வெளியிட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டியிருந்த நான், சார் -ஆய்வாளர் பணிக்கான வயது வரம்பை பொதுப்பிரிவினருக்கு 33 வயது, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 35 வயது, பட்டியலினத்தவர், பழங்குடியினருக்கு 38 வயதாக உயர்த்த வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தேன். அதை செயல்படுத்த சீருடைப் பணியாளர் தேர்வாணையம் தவறியிருப்பது நியாயமல்ல.

அதேபோல், தமிழக காவல்துறையில் கடந்த ஆண்டு டிசம்பர் 11-ஆம் தேதி நிலவரப்படி மொத்தம் 2219 காவல் சார்-ஆய்வாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. அந்த எண்ணிக்கை இப்போது 2600-ஐ தாண்டியிருக்கக்கூடும். 621 சார் ஆய்வாளர்கள் நியமனம் நிலுவையில் இருக்கும் நிலையில், குறைந்தது 2000 சார் ஆய்வாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். ஆனால், அதில் மூன்றில் ஒரு பங்கு குறைவாக 1299 பேர் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர். இது போதுமானதல்ல.

காவல்துறையின் வலிமையையும், தேர்வர்களின் நலனையும் கருத்தில் கொண்டு, சார் ஆய்வாளர் பணிக்கான வயது வரம்பை பொதுப்பிரிவினருக்கு 33 வயது, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 35 வயது, பட்டியலினத்தவர், பழங்குடியினருக்கு 38 வயதாக உயர்த்த வேண்டும். அதேபோல், தேர்ந்தெடுக்கப்படவுள்ளவர்களின் எண்ணிக்கையை 2000 ஆக உயர்த்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *