நாமக்கல்: அண்ணா பல்கலை. விவகார சார், தேர்தல் ஆணையத்தால் நடத்தப்படும் சார் (எஸ்ஐஆர்) என எந்த சார் என்றாலும் திமுகவுக்கு பயம் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேசினார்.
நாமக்கல் பூங்கா சாலையில் பாஜக பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பங்கேற்று பேசியது: “தமிழகத்துக்கு 11 மருத்துவக் கல்லூரிகளை மத்திய பாஜக அரசு வழங்கியது. இதனை வாங்கித் தந்தவர் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இங்குள்ள எம்பி சொன்னால் அமைச்சர் கேட்பதில்லை. அமைச்சர் சொன்னால் எம்பி கேட்பதில்லை. இப்படி இருந்தால் நாமக்கல் எப்படி வளர்ச்சி பெறும்?
நாமக்கல் மாவட்டத்துக்கு தேர்தல் அறிக்கையில் சொன்ன எதையும் திமுகவினர் செய்யவில்லை. கொல்லிமலையைச் சுற்றி உள்ள கனிம வளங்கள் சூறையாடப்படுகிறது. கனிம வளங்கள் மட்டுமின்றி கிட்னியையும் திருடிக் கொண்டுள்ளனர்.
திமுகவினர் நடத்தும் மருத்துவமனைகளுக்கு சென்றால் கிட்னி திருடிவிடுவர். நாம்தான் பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும். இப்போது சட்டத்தின் ஆட்சி நடக்கவில்லை. குடும்பத்தின் ஆட்சி நடக்கிறது. வரும் தேர்தலிலேயே உதயநிதி ஸ்டாலினை முதல்வராக்க வேண்டும் என்பதற்காக முதல்வர் ஸ்டாலின் பாடுபடுகிறார்.
அண்ணா பல்கலை. விவகார சார், தேர்தல் ஆணையத்தால் நடத்தப்படும் சார் (எஸ்ஐஆர்) என எந்த சார் என்றாலும் திமுகவுக்கு பயம் வந்துவிடுகிறது. இதில் என்ன பயம் இருக்கிறது உங்களுக்கு? அனைத்து தொகுதியிலும் தேசிய ஜனநாயக கூட்டணி வெல்லும் சூழல் உள்ளது.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 65 பேர் இறந்தனர். கரூரில் தவெக கூட்டத்தில் விஜய் ‘பத்து ரூபாய் பாட்டில்’ என பாடினார். அந்த பாட்டை பாடிய உடனே செருப்பு பறக்கிறது. இதையடுத்து நடந்த தள்ளுமுள்ளுவில் கொடூரமான சம்பவம் நடந்தது. இதுபோன்ற கொடூரமான சம்பவம் திமுக ஆட்சியில் நடைபெறும்.
கோவை பெண்களுக்கு பாதுகாப்பான இடம். ஆனால், அங்கு இரவு 11 மணியளவில் பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். இதனை தடுக்க வேண்டியது சட்டத்தை கையில் வைத்துள்ள முதல்வர்தான்” என்றார்.