பெங்களூரு பாலாஜி நகரைச் சேர்ந்தவர் வெங்கடரமணன். இவருக்கு நேற்று திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. உடனே அவரின் மனைவி ரூபா அவரை இரு சக்கர வாகனத்தில் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார். ஆனால் அங்கு டாக்டர் இல்லை. இதையடுத்து வேறு ஒரு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார். அங்கிருந்த மருத்துவர், வெங்கடரமணனுக்கு பக்கவாதம் ஏற்பட்டிருப்பதாகக் கூறி வேறு ஒரு மருத்துவமனைக்குச் செல்லும்படி தெரிவித்தார். இதையடுத்து ஆம்புலன்ஸில் செல்லமாம் என்று நினைத்தபோது ஆம்புலன்ஸ் கிடைக்கவில்லை. வேறு வழியில்லாமல் அவர்கள் இரு சக்கர வாகனத்தில் சென்றனர்.
ஆனால் வழியில் வெங்கடரமணனுக்கு மீண்டும் மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் அவர்களது வாகனம் விபத்தில் சிக்கியது. இதில் வெங்கடரமணன் மற்றும் அவரது மனைவி காயமடைந்தனர்.

வெங்கடரமணன் மனைவி சாலையில் ரத்தக்காயத்துடன் நின்று கொண்டு அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகளிடம் மருத்துவமனைக்குச் செல்ல உதவி கேட்டார். ஆனால் ஒரு வாகன ஓட்டியும் நிறுத்தவில்லை. நீண்ட நேரத்திற்குப் பிறகு ஒரு டாக்சி டிரைவர் வண்டியை நிறுத்தி வெங்கடரமணனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.
ஆனால், மாரடைப்பு மற்றும் விபத்து போன்ற காரணத்தால் வெங்கடரமணன் இறந்து போனார். இதுகுறித்து வெங்கடரமணனின் மனைவி கூறுகையில்,”‘என் கணவனைக் காப்பாற்ற மனிதாபிமானம் தவறிவிட்டது. நான் சாலையில் ரத்தத்துடன் நின்று கொண்டு வாகானங்களை நிறுத்தும்படி கெஞ்சினேன். ஆனால் யாரும் உதவ முன்வரவில்லை. என் கணவர் சாலையில் பல நிமிடங்கள் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தார்” என்று கண்ணீர்விட்டார். இந்த சோகமான சூழ்நிலையிலும் இறந்துபோன வெங்கடரமணன் கண்களை அவரின் குடும்பத்தினர் தானம் செய்தனர்.
பெங்களூருவில் ஏற்கெனவே மோசமான சாலை காரணமாக வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுவதாகத் தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருக்கிறது.