சென்னை: அரசியல் கட்சிகள் மற்றும் பிற அமைப்புகளின் நிகழ்வுகளுக்காக சாலையோரங்களில் தற்காலிகமாக கொடிக்கம்பங்கள் வைக்க அனுமதி கோருபவர்களிடம் ஒரு கொடி கம்பத்துக்கு தலா ரூ.1,000 கட்டணமாக வசூலிக்க வேண்டுமென தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் பொது இடங்கள் மற்றும் தேசிய – மாநில நெடுஞ்சாலைகள், உள்ளாட்சி அமைப்புகளுக்கு சொந்தமான இடங்களில் அனுமதியின்றி சட்டவிரோதமாக வைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சிகள் மற்றும் பிற அமைப்புகள், சங்கங்களின் கொடிக்கம்பங்களை ஏப்.28-க்குள் அகற்ற வேண்டுமென உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டிருந்தது.
அதன்படி அரசியல் கட்சிகள், அமைப்புகளின் சார்பில் கொடிக்கம்பங்கள் அமைக்க அனுமதி வழங்குவது தொடர்பாக மண்டல மற்றும் மாவட்ட அளவில் குழுக்களை அமைத்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. மேலும், அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளின் சார்பில் நடத்தப்படும் நிகழ்வுகளுக்காக தற்காலிகமாக கொடிக்கம்பங்கள் அமைப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்கப்பட்டன.
இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பாக நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசுத்தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன், கொடிக்கம்பங்களை அமைப்பது தொடர்பாக அரசாணையும், வழிகாட்டு விதிமுறைகளும் வகுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
அதையேற்க மறுத்த நீதிபதி, அரசியல் கட்சிகள் நடத்தும் பொதுக்கூட்டங்கள், மாநாடு போன்ற நிகழ்வுகளின்போது சாலைகளின் நடுவே உள்ள சென்டர் மீடியன் பகுதிகளிலும் சட்டவிரோதமாக கொடிக்கம்பங்கள் வைக்கப்படுகின்றன. அவ்வாறு கொடிகளை கட்டுவோருக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை.
எனவே, அரசியல் கட்சிகள் மற்றும் பிற அமைப்புகளின் நிகழ்வுகளுக்காக சாலையோரங்களில் தற்காலிகமாக கொடிக்கம்பங்கள் வைக்க அனுமதி கோருபவர்களிடம் ஒரு கொடி கம்பத்துக்கு தலா ரூ.1,000 கட்டணமாக வசூலிக்க வேண்டும். இவ்வாறு கட்டணம் வசூலிப்பதன் மூலம் அரசுக்கும் வருவாய் கிடைக்கும் என்றார்.
மேலும், கொடிக்கம்பங்கள் அமைப்பதற்கான விதிகளை கண்டிப்பாக அமல்படுத்த வேண்டுமென அனைத்து துறைத்தலைவர்களுக்கும் சுற்றறிக்கை பிறப்பிக்க வேண்டுமென தலைமைச் செயலருக்கும், டிஜிபிக்கும் உத்தரவிட்டார். அனுமதியின்றி சட்டவிரோதமாக கொடிக்கம்பங்களை வைப்போருக்கு எதிராக நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை நவ.12-க்கு தள்ளிவைத்துள்ளார்.