சென்னை: மாநகராட்சி சார்பில் சாலையோர வியாபாரிகளுக்கு நவீன அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் டிச.31-ம் தேதி வரை மாநகராட்சி நிர்வாகம் நீட்டித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகராட்சியில் சாலையோர வியாபாரிகளுக்கான வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல் மற்றும் விற்பனையை ஒழுங்குமுறைப் படுத்துவதற்காக சட்டம் மற்றும் விதிகளை பின்பற்றி நகர விற்பனைக் குழு அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
கடந்த நவ.6-ம் தேதி நடைபெற்ற நகர விற்பனைக் குழுவின் 8-வது கூட்டத்தில் மாநகராட்சியில் பதிவு செய்யப்பட்ட 32 ஆயிரத்து 796 சாலையோர வியாபாரிகளின் விற்பனையை ஒழுங்குபடுத்துவதற்காக சிப் (Chip) பொருத்திய கியூஆர் கோடு (QR Code) மற்றும் இணைய இணைப்பு (Weblink) பயன்பாட்டுடன் கூடிய புதிய நவீன அடையாள அட்டை வழங்குவது என முடிவெடுக்கப்பட்டுள்ளது.
அதற்கான சிறப்பு முகாம் கடந்த நவ.22-ம் தேதி தொடங்கியது. நவ.30-ம் தேதி வரை மாநகராட்சியின் அனைத்து மண்டல அலுவலகங்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதுவரை 5 ஆயிரத்து 186 வியாபாரிகள் மட்டுமே நவீன அடையாள அட்டை பெற்றுள்ளனர். இன்னும் 27 ஆயிரத்து 610 பேருக்கு வழங்க வேண்டியுள்ளது. அதனால் இந்த சிறப்பு முகாம் செயல்படும் காலம் வரும் டிச.31-ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது.
இதில், மாநகராட்சியால் வழங்கப்பட்ட சாலையோர வியாபாரிகளுக்கான அடையாள அட்டை, ஆதார் அட்டை மற்றும் கைபேசியினை கொண்டு வர வேண்டும். கைபேசி எண்ணுக்கு ஓடிபி அனுப்பப்படும். அந்த கைபேசி எண் மாநகராட்சி பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டு, பழைய அடையாள அட்டையை பெற்றுக்கொண்டு புதிய அடையாள அட்டை வழங்கப்படும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.