சாலை விபத்தில் சிக்கியவர்களுக்கு முதலுதவி செய்தால் ரூ.10,000 பரிசு வழங்கப்படும் என, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் அறிவித்திருக்கிறார்.
அது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், `சாலை விபத்துகளில் பாதிக்கப்பட்டவர்களின் உயிரைக் காப்பாற்றுவதற்காக, மத்திய அரசு மற்றும் தமிழக அரசு இணைந்து செயல்படுத்தி வரும் திட்டம்தான் `நல்ல சமாரியன்” (Good Samaritan) திட்டம். அதுகுறித்து பொதுமக்கள் மத்தியில் பெரிய அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்த சாலை போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்புத் துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. விபத்து ஏற்பட்ட பின் முதல் ஒரு மணி நேரம் மருத்துவ ரீதியாக பொன்னான நேரம் (Golden Hour) எனப்படுகிறது.
அந்த நேரத்தில் உயிரிழப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகமாக இருப்பதால், உடனடியான முதலுதவி செய்ய வேண்டியது மிக அவசியம். அதனை கருத்தில் கொண்டு சாலை விபத்துகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக உதவி செய்து, அவர்களை அருகிலுள்ள அரசு அல்லது தனியார் மருத்துவமனைகளில் சேர்க்கும் நபர்களை ஊக்கப்படுத்தும் விதமாக இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக மருத்துவ உதவிகளை வழங்கி, குறிப்பிட்ட நேரத்திற்குள் அவர்களை (Golden Hour) மருத்துவமனையில் சேர்க்கும் நபர் நல்ல சமாரியன் என அழைக்கப்படுவார்.