சென்னை: சாலை விபத்துகளால் ரத்த தான தேவை அதிகரித்துள்ளதாக எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் சுதா சேஷய்யன் தெரிவித்துள்ளார். வி.எச்.எஸ் பன்னோக்கு மருத்துவமனை ரத்த மையத்தின் முன்னாள் இயக்குநர் ஜெ.பாலசுப்ரமணியம் நினைவுநாளையொட்டி ரத்த தானம் செய்பவர்கள் மற்றும் நன்கொடை யாளர்கள் அமைப்புகளை கவுரவிக்கும் நிகழ்ச்சி சென்னை தரமணியில் உள்ள மருத்துவமனை வளாகத்தில் நேற்று நடைபெற்றது.
வி.எச்.எஸ் ரத்த மையத்தின் இயக்குநர் வி.மைதிலி தலைமை வகித்தார். மருத்துவமனை இயக்குநர் யுவராஜ் குப்தா வரவேற்புரை வழங்கினார். சிறப்பு விருந்தினராக எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் சுதா சேஷய்யன் கலந்து கொண்டு வி.எச்.எஸ். மருத்துவமனையுடன் சேர்ந்து ரத்த தான முகாம்களை நடத்திய இந்திய தர கட்டுப்பாட்டு நிறுவனம், சென்னை ஐஐடி உள்பட 110 நிறு வனங்களை கவுரவித்தார். முன்னதாக மருத்துவமனையில் ‘தலசீமியா’ ரத்த சோகை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் சிறுவர்கள், தங்களது கொடையாளர் களுக்கு நன்றி தெரிவித்தனர்.
பின்னர் சுதா சேஷய்யன் பேசியதாவது: 1960-70-களில் தன்னார்வ ரத்த தானம் என்பது கிடையாது. பொதுமக்கள் தேவைப்படும்போது ரத்த தானம் செய்து, அதற்காக பணம் பெற்றுக் கொள்வார்கள். அன்றைய காலத்தில் ரத்த வங்கிகளை தொடங்கி நடத்துவது என்பது மிகவும் கடினமானது. டாக்டர் ஜெ.பாலசுப்ரமணியம் அதை சிறப்பாகச் செய்தார். இன்றைக்கு தன்னார்வ ரத்த தானம் மிகவும் வளர்ச்சியடைந்துள்ளது.
எதிர்காலத்தில் தேவை அதிகரிக்கும்: இன்றைக்கு மேம்படுத்தப்பட்ட சிகிச்சை முறைகளால் மருத்துவம் வளர்ந்திருக்கிறது. குணப்படுத்த முடியாத பல நோய்களுக்கு சிகிச்சைகள் உள்ளன. ஆனால் இதற்காக அதிகள வில் ரத்தமும் தேவைப்படுகிறது. முன்பு மருத்துவமனைகளில் ஒரு நாளைக்கு 40 பாட்டில் ரத்தம் தேவையாக இருந்த நிலையில், இன்றைக்கு 400 பாட்டில் தேவைப்படுகிறது.
தலசீமியா நோய்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ரத்தம் தேவை. சாலை விபத்துகளாலும் ரத்தத்துக்கான தேவை அதிகரித்துள்ளது. ரத்த தானம் செய்ய பல இளைஞர்கள் இன்றைக்கு முன்வருகின்றனர். ஆனால் இயந்திரமயமான உலகம், வேகமான வாழ்க்கையில் அவசர தேவைக்காக அவர்களைத் தொடர்பு கொள்வது எதிர்காலத்தில் கடினமாக இருக்கலாம். எனவே தொடர்ந்து ரத்த தான முகாம்களை நாம் சிறப்பாக நடத்த வேண்டும். அதற்காக அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இந்நிகழ்வில் வி.எச்.எஸ் மருத்துவ மனை நிர்வாக அறங்காவலர் ஆர்.ராஜகோபால், வி.எச்.எஸ் ரத்த மையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பி.அத்மநாதன், ரத்தவியலாளர் டாக்டர் ரேவதி ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.