மத்தியப் பிரதேசத்தில் 15 ஆம் நூற்றாண்டு கோட்டையைச் சுற்றி மக்கள் புதையல் தேடி குழிகள் தோண்டுவது குறித்து மாவட்ட நிர்வாகம் விசாரணையைத் துவங்கியுள்ளனர்.
புர்ஹான்பூர் மாவட்டத்திலுள்ள 15 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வரலாற்று சிறப்பு மிக்க அஸிகார் கோட்டையைச் சுற்றிலும் அப்பகுதி மக்கள் புதையல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். சமீபத்தில் வெளியான நடிகர் விக்கி கௌஷலின் ‘சாவா’ திரைப்படத்தில் மத்தியப் பிரதேசத்திலுள்ள அஸிர்கார் கோட்டை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, அந்த கோட்டைப் பகுதியில் தங்க நாணயங்கள் உள்ளிட்ட புதையல்கள் இருப்பதாக வதந்தி பரவியுள்ளது. இதை நம்பிய அப்பகுதி வாசிகள் சிலர் அந்த கோட்டையைச் சுற்றியுள்ள நிலப்பரப்பில் தங்க நாணயங்கள் தேடி குழிகள் தோண்டியுள்ளனர்.
இதையும் படிக்க: கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட இஸ்ரேலியப் பெண்ணின் ஆண்நண்பர் பலி!
இதுகுறித்து புர்ஹான்பூர் மாவட்ட ஆட்சியர் ஹர்ஷ் சிங் கூறுகையில், இந்த விவகாரம் குறித்து மாவட்ட நிர்வாகம் விசாரணை மேற்கொண்டு அப்பகுதியில் குழிகள் தோண்டுவதை தடுக்க உத்தரவிட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.
மேலும், அப்பகுதியில் தங்க நாணயங்கள் ஏதேனும் கண்டுபிடிக்கப்பட்டால் அவை தொல்லியல் சிறப்பு மிக்கவையாக இருக்கக் கூடும் எனவே அவை அனைத்தும் அரசுக்கு சொந்தமானதாகக் கருதப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து வெளியான விடியோவில் அப்பகுதி வாசிகள் சிலர் செல்போனின் டார்ச் வெளிச்சத்தில் அஸிர்கார் கோட்டையைச் சுற்றி குழிகள் தோண்டுவது பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.