`சிகை கொற்றன் வர கண்ட’ – எகிப்து பிரமிடுகளில் தமிழ் கல்வெட்டுகள்; 2,000 ஆண்டுக்கால ஆச்சர்யம்!

Spread the love

அங்குள்ள கல்வெட்டுகளில் மிகவும் சுவாரஸ்யமான பெயர் ‘சிகை கொற்றன்’. இவன் ஒரு சாதாரண மனிதன் அல்ல, பெரும் வணிகக் குழுவின் தலைவனாக இருந்திருக்க வேண்டும். ‘சிகை’ என்றால் குடுமி அல்லது தலைமுடி என்று பொருள்; ‘கொற்றன்’ என்பது சங்க காலத்தில் வெற்றியாளர்களைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்ட பெயர்.

அங்குள்ள ஒரு கல்வெட்டில் “சிகை கொற்றன் வர கண்ட” என்று எழுதப்பட்டுள்ளது. அதாவது, “சிகை கொற்றன் இங்கு வந்து பார்த்தான்” என்று பொருள். இன்று நாம் சுற்றுலாத் தலங்களுக்குச் சென்றால் “நான் இங்கு வந்தேன்” என்று எழுதுவதைப் போல, 2,000 ஆண்டுகளுக்கு முன்பே ஒரு தமிழன் எகிப்தின் பிரமிடுகளைப் பார்த்து வியந்து தனது பெயரை அங்கு செதுக்கிச் சென்றுள்ளான்.

தமிழகத்தின் சேர நாட்டுத் துறைமுகங்களான முசிறி மற்றும் தொண்டி ஆகியவற்றிலிருந்து மிளகு, துணிகள் மற்றும் விலைமதிப்பற்ற கற்களை ஏற்றிக்கொண்டு எகிப்தின் பெரினிகே துறைமுகத்திற்குத் தமிழ் வணிகர்கள் சென்றனர்.

அங்கிருந்து ஒட்டகங்கள் மூலம் பாலைவனத்தைக் கடந்து, நைல் நதிக்கரையில் உள்ள நகரங்களுக்குச் சென்றுள்ளனர். அப்படிச் சென்றபோதுதான், உலகப் புகழ்பெற்ற இந்த அரசர்களின் கல்லறைகளைப் பார்க்க சிகை கொற்றன் போன்ற வணிகர்கள் சென்றிருக்கிறார்கள். இது ஒரு மிகச்சிறந்த வரலாற்றுப் பயணத்தின் அடையாளமாகும்.

இதுவரை வரலாற்று ஆசிரியர்கள், மேலை நாட்டு வணிகர்கள் மட்டுமே இந்தியாவுக்கு வந்து சென்றதாகக் கருதி வந்தனர். ஆனால், எகிப்தின் மிக முக்கியமான மற்றும் புனிதமான இடமாகக் கருதப்பட்ட ‘அரசர்களின் பள்ளத்தாக்கிற்குள்’ தமிழர்கள் நுழைந்துள்ளார்கள் என்பது, தமிழர்களின் உலகளாவிய செல்வாக்கை நிரூபிக்கிறது. இந்தக் கண்டுபிடிப்பு பண்டைய காலத்திலேயே தமிழர்கள் உலக வரைபடத்தில் எவ்வளவு வலுவான தடம் பதித்திருந்தார்கள் என்பதை உலகிற்கு உரக்கச் சொல்கிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *