சென்னை: சிக்கனமாக செலவு செய்து அஞ்சலகத்தில் சேமிக்க வேண்டும் என்று உலக சிக்கன தினத்தில் முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தியுள்ளனர்.
உலக சிக்கன தினம் இன்று அக்.30-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட வாழ்த்துச் செய்தி: ஒவ்வொருவரும் தமது வருவாயில் ஒரு பகுதியை சேமிக்க வேண்டும். அத்தகைய சேமிப்பும் பாதுகாப்பானதாக அமைய வேண்டும்.
ஒருவர் சேமிக்கும் தொகையானது முதுமையில் நம்பிக்கையையும், பாதுகாப்பையும் அளிக்கிறது. சிறுகச் சிறுகச் சேமிப்பதன் மூலம் குடும்பத்துக்குத் தேவைப்படக்கூடிய அவசரச் செலவுகளை எளிதில் எதிர்கொள்ள முடிகிறது. எனவே, வரவுக்குள் செலவு செய்து சிக்கனமாக வாழப் பழக வேண்டும். சிக்கனமாகச் செலவு செய்து சேமிக்க அருகிலுள்ள அஞ்சலகங்களில் சேமிப்புக் கணக்கை தொடங்க வேண்டுகிறேன். இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தனது வாழ்த்துச் செய்தியில், ‘நமது வருமானத்தின் முதல் செலவு சேமிப்பாகவே இருக்க வேண்டும், சிக்கனத்தின் மூலமே சேமிப்பு நிகழ்கிறது. நிதி சார்ந்து பாதுகாப்பாக இருக்க சிக்கனமும் சேமிப்பும் உதவுகின்றன. ஒரு குறிப்பிட்ட தொகையை சிறுசேமிப்பாக அருகிலுள்ள அஞ்சலகங்களில் தொடர் சேமிப்பு கணக்கைத் தொடங்க வேண்டும்’’ என தெரிவித்துள்ளார்.