சிக்ஸர் மழை பொழிந்த கிளாசன், டிராவிஸ் ஹெட்; ஐபிஎல் வரலாற்றில் ஹைதராபாத் மீண்டும் சாதனை!

dinamani2F2025 05 252Fiqlqpdge2FAP25145581958280
Spread the love

கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 3 விக்கெட்டுகளை இழந்து 278 ரன்கள் எடுத்துள்ளது.

ஐபிஎல் தொடரில் தில்லியில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்கைத் தேர்வு செய்து முதலில் விளையாடியது.

இதையும் படிக்க: அபார வெற்றியுடன் நடப்பு ஐபிஎல் தொடரை நிறைவு செய்த சிஎஸ்கே!

கிளாசன், ஹெட் அதிரடி; வரலாற்றுச் சாதனை

முதலில் விளையாடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 278 ரன்கள் எடுத்துள்ளது. தொடக்க ஆட்டக்காரர்களான அபிஷேக் சர்மா மற்றும் டிராவிஸ் ஹெட் அணிக்கு அதிரடியான தொடக்கத்தைத் தந்தனர். 92 ரன்களுக்கு சன்ரைசர்ஸ் அணி அதன் முதல் விக்கெட்டினை இழந்தது. அதிரடியாக விளையாடிய அபிஷேக் சர்மா 16 பந்துகளில் 32 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 4 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும்.

இதனையடுத்து, டிராவிஸ் ஹெட் மற்றும் ஹெய்ன்ரிச் கிளாசன் ஜோடி சேர்ந்தனர். இந்த இணை தங்களது அசாத்திய பேட்டிங்கால் கொல்கத்தா அணியின் பந்துவீச்சாளர்களை திணறடித்தது. அதிரடியில் மிரட்டிய இருவரும் சிக்ஸர் மழையைப் பொழிந்தனர். அதிரடியாக விளையாடிய டிராவிஸ் ஹெட் சிக்ஸர் விளாசும் முயற்சியில் சுனில் நரைன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவர் 40 பந்துகளில் 76 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 6 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்கள் அடங்கும். அதன் பின், கிளாசனுடன் இஷான் கிஷன் ஜோடி சேர்ந்தார்.

இஷான் கிஷன் அவ்வப்போது பவுண்டரிகளை விரட்ட, கிளாசன் சிக்ஸர்களை பறக்கவிட்டார். இஷான் கிஷன் 20 பந்துகளில் 29 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 4 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். களமிறங்கியது முதலே பந்துவீச்சாளர்களை திணறடித்த கிளாசன் 37 பந்துகளில் சதம் விளாசி அசத்தினார்.

ஐபிஎல் வரலாற்றில் அதிவேகச சதம் விளாசிய மூன்றாவது வீரர் என்ற சாதனையை யூசுப் பதானுடன் இணைந்து அவர் படைத்துள்ளார். அவர் 39 பந்துகளில் 105 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். அதில் 7 பவுண்டரிகள் மற்றும் 9 சிக்ஸர்கள் அடங்கும். அனிகேத் வர்மா 6 பந்துகளில் 12 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார். அதில் ஒரு பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும்.

இதையும் படிக்க: தோனியிடம் எப்போதும் கேட்கப்படும் கேள்வி; பதிலால் ஆர்ப்பரித்த ரசிகர்கள்!

கொல்கத்தா தரப்பில் சுனில் நரைன் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். வைபவ் அரோரா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினார்.

ஐபிஎல் வரலாற்றில் குவிக்கப்பட்ட மூன்றாவது அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். இதற்கு முன்பாக, கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் பெங்களூருவுக்கு எதிராக சன்ரைசர்ஸ் அணி 287 ரன்கள் எடுத்திருந்ததே ஐபிஎல் வரலாற்றில் ஒரு அணியால் குவிக்கப்பட்ட அதிகபட்ச ரன்களாக இருந்தது. நடப்பு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 286 ரன்கள் குவித்து ஐபிஎல் வரலாற்றில் இரண்டாவது அதிகபட்ச ஸ்கோரை எடுத்து வரலாறு படைத்தது. தற்போது, ஐபிஎல் வரலாற்றில் மூன்றாவது அதிகபட்ச ஸ்கோரையும் இன்றையப் போட்டியின் மூலம் சன்ரைசர்ஸ் அணியே எடுத்து சாதனை படைத்துள்ளது.

279 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி விளையாடி வருவது குறிப்பிடத்தத்து.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *