இலங்கை அதிபர் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி தலைவா் அநுரகுமார திஸ்ஸநாயக அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். மார்க்சிஸ்ட் உடன் கூட்டணி வைத்துள்ள அநுரகுமார திஸ்ஸநாயக அந்நாட்டின் அதிபராக திங்கள்கிழமை(செப்.23) எளிமையான முறையில் நடைபெற உள்ள பதவியேற்பு விழாவில் பதவியேற்பார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கை அதிபர் தேர்தலில் அநுரகுமார திஸ்ஸநாயக வெற்றி – நாளை பதவியேற்பு!
இந்த நிலையில், தேர்தல் வெற்றி குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் சமூக வலைதளப் பதிவில், “நூற்றாண்டுகளாக நாம் வளர்த்தெடுத்த கனவு இறுதியாக நனவாகப் போகிறது.
இந்த சாதனை எந்தவொரு தனி மனிதனின் உழைப்புக்கும் கிடைத்த பலனல்ல, உங்களைப் போன்ற ஆயிரக்கணக்கானோரின் கூட்டு முயற்சியால் எட்டப்பட்டுள்ள சாதனை இது.
உங்களுடைய ஈடுபாடே எங்களை இதுவரை கொண்டு வந்திருக்கிறது. இதற்காக நான் மிகுந்த கடமைப்பட்டிருக்கிறேன். இந்த வெற்றி நம் அனைவருக்குமானது.
இந்த இலக்கை அடைய பலர் வியர்வை சிந்தி, கண்ணீர் சிந்தி, தங்கள் வாழ்க்கையை தியாகம் செய்துள்ளனர். பல பேரின் தியாகங்களால் இந்த நிலையை நாம் அடைவதற்கான நம் பயணப் பாதயை வகுக்கப்பட்டுள்ளது.அவர்கள் செய்துள்ள தியாகங்களை மறக்கவே முடியாது. அவர்கள் பட்ட இன்னல்களையும், அவர்களுடைய நம்பிக்கையையும் அவற்றின் பொறுப்புகளை உணர்ந்து நாம் ஏந்திச் செல்வோம்.
நம்பிக்கையும், எதிர்பார்ப்புகளுடன் கூடிய லட்சக்கணக்கான கண்கள் நம்மை முன்னோக்கி உந்தித் தள்ளுகின்றன. இந்நிலையில், இலங்கை வரலாற்றைத் திருப்பியெழுத ஒன்றிணைந்து நாம் தயாராக நிற்போம்.
இந்த கனவை புதியதொரு ஆரம்பத்துடன் மட்டுமே நனவாக்க முடியும். சிங்களர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள், மற்றும் இலங்கை மக்கள் அனைவருடைய ஒற்றுமையே இந்த புதிய ஆரம்பத்துக்கான அடித்தளம். சிறந்த எதிர்காலத்தை வடிவமைக்க நாம் அனைவரும் கைகோர்ப்போம்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.