சிதம்பரம் கோயில் சொத்துகளை மூன்றாவது நபர்களுக்கு விற்றதற்கான ஆதாரங்கள் உள்ளதாக அரசு தரப்பு தகவல் | evidence for Chidambaram temple has sold properties to third parties: TN Govt

1330690.jpg
Spread the love

சென்னை: சிதம்பரம் நடராஜர் கோயில் சொத்துக்களை தீட்சிதர்கள் மூன்றாவது நபர்களுக்கு விற்பனை செய்ததற்கான ஆதாரங்கள் சார்-பதிவாளர் அலுவலகங்களி்ல் இருந்து திரட்டப்பட்டு்ள்ளது என அறநிலையத்துறை தரப்பில் உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சிதம்பரம் நடராஜர் கோயில் வரவு – செலவு கணக்கு விவரங்களையும், கோயிலுக்கு சொந்தமான நிலங்கள் விற்கப்பட்டுள்ளதாகவும் கூறி இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் ஆர். சுரேஷ்குமார், எஸ்.சவுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது பொது தீட்சிதர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன், ‘‘கோயிலுக்கு சொந்தமான எந்த நிலங்களையும் தீட்சிதர்கள் விற்கவில்லை. விற்பனை செய்ததாக கூறப்படுவதற்கான ஆதாரங்களும் இல்லை. கோயில் நிலங்களை தீட்சிதர்கள் விற்று விட்டதாக அறநிலையத்துறை கூறும் குற்றச்சாட்டில் துளியும் உண்மை இல்லை. இதுதொடர்பாக விசாரிக்க உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க வேண்டும். கோயில் நகைகளுக்கும் முறையான கணக்கு உள்ளது. எந்த நகையும் மாயமாகவில்லை எனக்கூறி கடந்த 2018 முதல் 2022 வரையிலான கோயில் கணக்கு வழக்குகள் குறித்த அறிக்கையை சீலிட்ட கவரில் தாக்கல் செய்தார்.

பதிலுக்கு அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் மங்கையர்கரசி தரப்பில் அறநிலையத்துறை வழக்கறிஞர் என்.ஆர்.ஆர்.அருண் நடராஜன் அறிக்கை சமர்ப்பித்தார். அதில், ‘சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு சொந்தமான நிலங்கள் கடந்த 1974-ம் ஆண்டு, 1985-ம் ஆண்டு மற்றும் 1988-ம் ஆண்டுகளில் தீட்சிதர்களால் மூன்றாவது நபர்களுக்கு விற்பனை செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் உள்ளது.

சிதம்பரம் நடராஜர் கோயில் சொத்துக்கள் குறித்து விசாரணை நடத்த சிறப்பு வட்டாட்சியரை நியமித்து தமிழக அரசு கடந்த 1976-ம் ஆண்டு அரசாணை பிறப்பித்துள்ளது. சிறப்பு வட்டாட்சியர் நடத்திய விசாரணையில் நஞ்சை, புஞ்சை என மொத்தம் 295.93 ஏக்கர் நிலம் உள்ளது. கோயிலுக்கு நிலத்தை தானமாக எழுதி கொடுத்தவர்களின் வாரிசுகள் வசம் உள்ள 1267.09 ஏக்கர் நிலத்தில் இருந்து கிடைக்கும் வருமானம் கோயிலுக்கும், தர்ம காரியங்களுக்கும் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் மீதமுள்ள 271.97 ஏக்கர் நிலங்களின் மூலமாக கிடைக்கும் வருமானம் கோயிலுக்கு செலுத்தப்படுவதில்லை.

எழுதி வைத்தவர்களின் வாரிசுகளே அந்த சொத்துக்களை அனுபவித்து வருகின்றனர். அதேபோல கட்டளைதாரர்கள் கோயிலுக்கு வழங்க வேண்டிய தொகையை தீட்சிதர்கள் வசம் அளிக்கின்றனர். அதற்கு எந்த முறையான கணக்கு விவரங்களும் இல்லை. இதுதொடர்பாக பதிலளிக்க தீட்சிதர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டது. ஆனால் அவர்கள் இதுதொடர்பான வழக்கு கடந்த 2017-ம் ஆண்டு முதல் நிலுவையில் இருந்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

சிதம்பரம் நடராஜர் கோயில் சொத்துக்கள் விற்பனை தொடர்பான அனைத்து விவரங்களும் சார்-பதிவாளர் அலுவலகங்களில் இருந்தே திரட்டப்பட்டு்ள்ளது. சேத்தியாதோப்பு சார் பதிவாளர் அலுவலகத்தில் கடந்த 1974-ம் ஆண்டு சுமார் 12.5 ஏக்கர் நிலம் ஸ்ரீராமலு நாயுடு என்பவருக்கு, வேம்பு தீட்சிதர் என்பவரால் விற்பனை செய்யப்பட்டுள்ளது. சுமார் 5.5 ஏக்கர் நிலம் அண்ணாமலை பல்கலைக்கழகத்துக்கு கடந்த 1985, 1988-ம் ஆண்டு்களில் தில்லை நடராஜர் தீட்சிதர் என்பவரால் எழுதி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலங்களை மீட்க எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பொது தீட்சிதர்கள் ஒத்துழைப்பு அளிப்பது இல்லை, என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதையடுத்து நீதிபதிகள், அறநிலையத்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அறிக்கைக்கு பொது தீட்சிதர்கள் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை வரும் நவ.14-க்கு தள்ளி வைத்துள்ளனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *