பஞ்சபூதத் தலங்களில் ஆகாயத் தலம் சிதம்பரம். முற்காலத்தில் தில்லை மரங்கள் சூழ்ந்த வனமாக இருந்ததால் இத்தலத்துக்குத் தில்லை என்றே பெயர் ஏற்பட்டது. இத்தலத்தில் ஈசன் நடராஜராகக் கோயில்கொண்டு அருள்கிறார்.
சைவர்களின் தலைமைப்பீடமாகத் திகழும் இத்தலத்தின் மகிமைகள் அநேகம். வாருங்கள் சிதம்பரம் தலம் குறித்துத் தெரிந்துகொள்வோம்.
இத்தலத்தின் மூத்த சுவாமி திருமூலநாதர். இவர் தனிக்கோயிலில் அருள்பாலிக்கிறார். இத்தலத்திலேயே ஈசன் ஆடல்வல்லானாகவும் கோயில்கொண்டார். இத்தல இறைவனுக்கு சபாநாயகர், கூத்தப்பெருமான், விடங்கர், மேருவிடங்கர், தட்சிண மேருவிடங்கர், பொன்னம்பல கூத்தன் போன்ற பெயர்களில் போற்றுகின்றனர் பக்தர்கள்.
அம்பிகையின் திருநாமம் உமையாம்பிகை எனப்படும் சிவகாமசுந்தரி. இத்தலத்தின் சிறப்புகளைப் பற்றிச் சொல்லும் புராணங்கள், பூவுலகில் உள்ள எல்லா சிவமூர்த்தங்களின் சாந்நித்தியமும் நள்ளிரவில் ஒடுங்கும் திருத்தலம் தில்லைச் சிதம்பரம்.

ஒருமுறை மகாவிஷ்ணு சயனக் கோலத்தில் இருக்கும்போது அவர் உடல் எடை கூடுவதைப் போன்று உணர்ந்தாராம் ஆதிசேஷன். அதன் காரணம் என்ன என்று பெருமாளிடம் அவர் கேட்க, ஈசன் ஆடும் ஆனந்த நடனம் கண்டதாகவும் அந்த மகிழ்ச்சியில் தன் உடல் எடை கூடியதாகவும் தெரிவித்தார்.
அப்படிப்பட்ட ஆனந்த நடனத்தைத் தானும் காணவேண்டும் என்று ஆவல் கொண்டார் ஆதிசேஷன். அதற்கு வரமளித்த விஷ்ணு, சிதம்பரம் தலம் சென்று தவம் செய்யப் பணித்தார். ஆதிசேஷனின் தவத்துக்கு மகிழ்ந்த ஈசன், திருமால், நந்தி, பிரம்மன் ஆகியோர் இசைக்க, ஈசன் ஆதிசேஷனுக்காகத் திருநடனம் புரிந்த க்ஷேத்திரம் இது.
ஈசன் நடம் புரிந்த தலங்கள் ஐந்து. அவற்றில் இது இரண்டாவது சபை. இதை பொற்சபை என்று போற்றுகிறார்கள். சுமார் 43 ஏக்கர் பரப்பளவு கொண்ட பிரமாண்டமான சிதம்பரம் ஆலயத்தில், `நால்வர் கோயில்’ ஒன்று உள்ளது.
இதுவே தேவார மூவர்களின் ஓலைச் சுவடிகளைப் பாதுகாத்த இடம். இங்கிருந்தே திருமுறைகள் உருவாயின என்பது வரலாறு.