சிதம்பரம் நடராஜர் கோயில் கனகசபை தரிசனத்துக்கு குறுக்கீடுகள் இருந்தால் நடவடிக்கை எடுக்கலாம்: ஐகோர்ட் | Chidambaram Nataraja Temple issue high court oreder

1276873.jpg
Spread the love

சென்னை: சிதம்பரம் நடராஜர் கோயி்ல் ஆனி திருமஞ்சன விழாவின்போது கனகசபையில் நின்று பக்தர்கள் தரிசனம் செய்ய எந்த தடையும் விதிக்கப்படாத நிலையில், அதில் ஏதும் குறுக்கீடுகள் இருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம், என அறநிலையத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிதம்பரம், நடராஜர் கோயிலில் நாளை முதல் மூன்று நாட்களுக்கு ஆனி திருமஞ்சன விழா நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியின்போது பக்தர்கள், கனகசபை மீது நின்று சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கக் கோரி சம்பந்தமூர்த்தி ராமநாதன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன், நீதிபதி முகமது ஷபீக் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.அப்போது, கனகசபை மீது நின்று சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கும் அரசாணையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் எந்த தடை உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என அறநிலையத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதையடுத்து நீதிபதிகள், கனகசபையில் நின்று தரிசனம் செய்ய அனுமதிக்கும் அரசாணைக்கு எந்த தடையும் விதிக்கப்படாத நிலையில், சட்டத்தை கையி்ல் எடுத்துக்கொண்டு யாரேனும் குறுக்கீடுகள் செய்தால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம், என அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டனர்.

மேலும், இது தொடர்பாக அதிகாரிகளுக்கு மனு அளிக்க மனுதாரருக்கு அறிவுறுத்திய நீதிபதிகள், இந்த விவகாரம் தொடர்பாக அடுத்த வாரம் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அறநிலையத் துறைக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *