சென்னை: சிதம்பரம் நடராஜர் கோயில் ஆக்கிரமிப்புகளை ஆய்வுசெய்ய, வெளி மாநிலத்தைச் சேர்ந்த மாவட்ட ஆட்சியர் நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 21-ம் தேதி திருவான்மியூரில் நடைபெற உள்ள திருமண விழாவில் பங்கேற்கும் 31 மணமக்களுக்கு, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேற்று பட்டு வேட்டி, சட்டை, துண்டு மற்றும் பட்டுப் புடவைகளை வழங்கினார். நுங்கம்பாக்கத்தில் உள்ள அறநிலையத் துறை ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு, செய்தியாளர்களிடம் அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது: நடப்பு நிதியாண்டுக்கான அறநிலையத் துறை மானியக்கோரிக்கையில், “பொருளாதாரத்தில் பின்தங்கிய 700 ஜோடிகளுக்கு திருக்கோயில்கள் சார்பாக 4 கிராம் தங்கத் தாலி உட்பட ரூ.60,000 மதிப்பில் சீர்வரிசைகள் வழங்கி, திருமணம் நடத்தி வைக்கப்படும்” என்று அறிவிக்கப்பட்டது.
முதல்கட்டமாக வரும் 21-ம் தேதி திருவான்மியூரில் 31 ஜோடிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் திருமணம் நடத்திவைத்து, சீர்வரிசைப் பொருட்களை வழங்க உள்ளார். அதேநாளில், தமிழகம் முழுவதும் 304 தம்பதிகளுக்கு திருமணங்கள் நடத்தி வைக்கப்பட உள்ளன. திருக்கோயில்கள் சார்பில் மாதந்தோறும் பவுர்ணமி நாளில் திருவிளக்குப் பூஜை நடத்தும் திட்டம் 17 கோயில்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஒருவேளை அன்னதானம் வழங்கும் திட்டம் 20 கோயில்களிலும், நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் 9 கோயில்களிலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. ஏற்கெனவே 7 கோயில்களில் மகா சிவராத்திரி விழா கொண்டாடப்பட்ட நிலையில், இந்த ஆண்டு மேலும் 2 கோயில்களில் கொண்டாடப்பட உள்ளது.
அறநிலையத் துறை சார்பில் இதுவரை 2,226 கோயில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது. கோயில்களுக்குச் சொந்தமான ரூ.6,792 கோடி மதிப்பிலான 7,069 ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்டுள்ளன. சிதம்பரம் நடராஜர் கோயில் ஆக்கிரமிப்பு நிலங்கள் தொடர்பாக நீதிமன்றம் கடும் உத்தரவு பிறப்பித்துள்ளதுடன், அதை ஆய்வுசெய்ய வெளி மாநிலத்தைச் சேர்ந்த மாவட்ட ஆட்சியரை நியமித்திருக்கிறது. சிதம்பரம் கோயிலில் தவறு நடந்திருந்தால், அறநிலையத் துறையும், திராவிட மாடல் அரசும் நிச்சயம் நடவடிக்கை எடுக்கும்.
திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயில் ரீல்ஸ் பிரச்சினை தொடர்பாக உரிய விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. புழல் கோயில் பூசாரியை மின்சாரம் தாக்கியது எதிர்பாராமல் நடந்த விபத்தாகும். அவரை உரிய நேரத்தில் மருத்துவமனையில் சேர்த்து, தக்க சிகிச்சை அளித்துள்ளனர். இவ்வாறு அமைச்சர் சேகர்பாபு கூறினார்.