சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் ஆணவத்துடன் செயல்படுவது நல்ல அறிகுறி அல்ல: உயர் நீதிமன்றம் | Chidambaram Nataraja Temple dikshitars acting arrogantly is not a good sign: HC

1328089.jpg
Spread the love

சென்னை: சிதம்பரம் நடராஜர் கோயிலில் தீட்சிதர்கள் ஆணவத்துடன் செயல்படுவது நல்ல அறிகுறி கிடையாது என்று ஆதங்கம் தெரிவித்துள்ள உயர் நீதிமன்ற நீதிபதி, இதே நிலை நீடித்தால் கோயிலுக்கு வரும் பக்தர்களின் வருகை தானாக குறைந்து விடும் என கருத்து தெரிவித்துள்ளார்.

சிதம்பரம் நடராஜர் கோயிலில் செவிலியர் ஒருவரை தாக்கியதாகவும், பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாகவும், கனகசபையில் நின்று பக்தர்கள் தரிசனம் செய்ய உதவியதாகவும் கூறி நடராஜ தீட்சிதர் என்பவரை இடைநீக்கம் செய்து பொது தீட்சிதர்கள் குழு நடவடிக்கை எடுத்தது. இதை எதிர்த்து நடராஜ தீட்சிதர் அறநிலையத் துறை இணை ஆணையரிடம் முறையீடு செய்தார். அதை விசாரித்த கடலூர் இணை ஆணையர், நடராஜ தீட்சிதரின் இடைநீக்கத்தை ரத்து செய்து உத்தரவிட்டார்.

இணை ஆணையரின் உத்தரவை எதிர்த்து பொது தீட்சிதர்கள் குழு செயலாளரான வெங்கடேச தீட்சிதர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், பொது தீட்சிதர் குழு எடுத்த முடிவில் தலையிட அறநிலைத் துறைக்கு எந்த அதிகாரமும் இல்லை. எனவே நடராஜ தீட்சிதரின் இடைநீக்கத்தை ரத்து செய்த இணை ஆணையரின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி எம்.தண்டபாணி முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது நடராஜ தீட்சிதர் தரப்பில், “உச்ச நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு சிதம்பரம் நடராஜர் கோயில் தங்களுக்குச் சொந்தமானது என்பது போன்ற நினைப்பில் பொது தீட்சிதர்கள் வரம்பு மீறி செயல்படுகின்றனர். நீதிமன்றம் தான் இதை கட்டுப்படுத்த வேண்டும்,” என வாதிடப்பட்டது. அப்போது குறுக்கிட்ட நீதிபதி, “தீட்சிதர்களால் எனக்கும் பிரச்சினை ஏற்பட்டது. மனக்கஷ்டங்களை போக்குவதற்காக கோயிலுக்கு வரும் பக்தர்களை கோயிலில் அவமானப்படுத்துவது, வேதனையளிக்கிறது.

சிதம்பரம் நடராஜர் கோயிலில் தீட்சிதர்கள் ஆணவத்துடன் செயல்படுகின்றனர். இது ஒரு நல்ல அறிகுறி கிடையாது. நடராஜர் கோயிலுக்கு வருபவர்கள் எல்லோரும் தங்களுடன் சண்டைக்கு வருவது போல தீட்சிதர்கள் நினைக்கின்றனர். சிதம்பரம் நடராஜர் கோயில் பொது தீட்சிதர்கள் கடவுளை விட தாங்கள் மேலானவர்கள் என நினைக்கக் கூடாது. சிதம்பரம் நடராஜர் கோயிலில் மட்டுமே நடத்தப்படும் ஆரூத்ரா தரிசனம் தற்போது பல கோயில்களில் நடத்தப்படுகிறது.

தீட்சிதர்களின் செய்கையால் சிதம்பரம் கோயில் ஆரூத்ரா தரிசனத்துக்கு முன்புபோல பக்தர்கள் கூட்டம் வருவதில்லை. இதேநிலை நீடித்தால் பக்தர்கள் வருகை குறைந்து பழமையான நடராஜர் கோயில் பாழாகி விடும். கோயிலில் காசு போட்டால் மட்டுமே பூ கிடைக்கிறது. இல்லையென்றால் விபூதி கூட கிடைக்காது,” என்று நீதிபதி தெரிவித்தார். பின்னர் இந்த வழக்கில் அறநிலையத் துறை தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை அக்.21-ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *