சிதைந்த மில்லியன் டாலர் கனவு; ரீல்ஸ் மோகத்தில் கார் ஏற்றி கொன்ற சிறுவன்; ஒற்றைத் தாயின் தீராத வேதனை!

Spread the love

டெல்லி துவாரகா பகுதியில் நடந்த கோரமான கார் விபத்து, ஒரு குடும்பத்தின் ஒட்டுமொத்த நம்பிக்கையையும் சிதைத்துள்ளது. 23 வயதான சாஹில் தனேஸ்ரா என்ற இளைஞர், சிறுவன் ஒருவன் ஓட்டி வந்த ஸ்கார்பியோ கார் மோதி உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

சாஹில் வெறும் 23 வயது இளைஞர் மட்டுமல்ல; அவர் தனது தாயின் ஒரே நம்பிக்கை. பிபிஏ இறுதி ஆண்டு படித்து வந்த சாஹில், தனது கடின உழைப்பால் இங்கிலாந்தின் மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி பயில இடம் கிடைத்திருந்தார். இந்த ஆண்டு இறுதியில் அவர் வெளிநாடு செல்லவிருந்தார். “எனது மகன் மிகவும் திறமையானவன், தனது மேற்படிப்புக்கான விண்ணப்பங்கள் அனைத்தையும் அவனாகவே கவனித்துக் கொண்டான். பகுதி நேர வேலை செய்து தனது படிப்பிற்குத் தேவையான உதவிகளைச் செய்து வந்தான்” என்று அவரின் தாய் வேதனையுடன் கூறுகிறார். சாஹில் அறையின் சுவர்களில் ஒட்டப்பட்டிருந்த ஊக்கமளிக்கும் வாசகங்களும், மெடல்களும் அவரின் லட்சிய வெறியைப் பறைசாற்றுகின்றன. அதில் “My $1,000,000 Year” என்று பெரிய எழுத்துக்களில் எழுதப்பட்டிருந்தது. அதாவது, தனது கடின உழைப்பால் ஆண்டுக்கு 10 லட்சம் டாலர் ஈட்டும் நிலைக்கு உயர வேண்டும் என்பதே அந்த இளைஞனின் லட்சியமாக இருந்துள்ளது.

சாஹிலை ஒரு ஒற்றைப் பெற்றோராக போராடி வளர்த்த அவரது தாய் இன்னா மக்கான், சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள வீடியோ பார்ப்பவர் நெஞ்சை உலுக்குகிறது. “23 வருடம் ஒரு தாயாக நான் கஷ்டப்பட்டு வளர்த்த என் மகனை, வெறும் சில வினாடி ரீல்ஸ் மோகத்திற்காக ஒரு சிறுவன் கொன்றுவிட்டான். அந்த ஸ்கார்பியோ கார் அதிவேகத்தில் தவறான திசையில் வந்து என் மகனை மோதியது. அவன் ரத்த வெள்ளத்தில் கிடந்தபோது உதவிக்குக் கூட யாரும் வரவில்லை. ஆம்புலன்ஸ் அங்கு நின்றும் கூட, நான் 10 நிமிடங்கள் கத்திய பிறகுதான் அவனைத் தூக்கினார்கள்” என்று அவர் கண்ணீர் மல்கக் கூறுகிறார்.

விபத்தை ஏற்படுத்திய சிறுவன், தனது சகோதரியுடன் சேர்ந்து சமூக வலைதளங்களுக்காக “ஸ்டண்ட் ரீல்ஸ்’ எடுத்துக் கொண்டு காரை ஓட்டியதாகக் குற்றம் சாட்டப்படுகிறது. அந்த ஸ்கார்பியோ கார் மீது ஏற்கனவே 13 முறை அதிவேகமாகச் சென்றதற்கான அபராதங்கள் விதிக்கப்பட்டிருந்தும், அந்த சிறுவனின் தந்தை தனது மகனுக்கு காரைக் கொடுத்ததுதான் இந்த மரணத்திற்கு முக்கியக் காரணம் என்று சாஹிலின் தாய் குற்றம் சாட்டுகிறார். “பணம் இருப்பதால் எதையும் செய்யலாம் என்ற எண்ணம் சிலருக்கு இருக்கிறது. சாலைகளில் மாணவர்கள் பாதுகாப்பாக இல்லையென்றால் வேறு யாருக்குப் பாதுகாப்பு?” என்ற அவரது கேள்வி ஆழமானது.

விபத்தை ஏற்படுத்திய சிறுவனுக்கு 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத வேண்டும் என்ற காரணத்திற்காக இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. தனது மகனின் மரணத்திற்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்றும், பொறுப்பற்ற முறையில் காரைக் கொடுத்த அந்த சிறுவனின் தந்தை மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரி சாஹிலின் தாய் தொடர்ந்து போராடி வருகிறார். ஒரு இளைஞனின் அழகான எதிர்காலம் மற்றும் ஒரு தாயின் 23 ஆண்டுக்கால தவ வாழ்க்கை, ஒரு நொடிப் பொழுது ‘ரீல்ஸ்’ ஆசையினால் சாம்பலாகிப் போனது ஈடு செய்ய முடியாத இழப்பாகும்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *