“தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, ‘IMPCOPS’ எனும் கூட்டுறவு நிறுவனம் 80 ஆண்டுகளுக்கும் மேலாகச் சித்த, ஆயுர்வேத, யுனானி மருந்துகளை அனைத்துப் பகுதிகளுக்கும் கொண்டு சேர்த்துள்ளது. தற்போது ‘SKM’ நிறுவனம் சிறப்பாகச் செயல்படுகிறது. இந்திய அளவில் ஆயுர்வேதத் துறையில் Dabur, Zandu, Baidyanath, Himalaya, Kottakkal, AVN போன்ற நிறுவனங்கள் நம்பிக்கையுடன் வளர்ந்து வருகின்றன.
இவை தவிர அரவிந்த் ஹெர்பல், சோலமலை, ராஜா சித்தா, ஜெம் ட்ரீஸ், சத்யாஸ் ட்ரக்ஸ், அன்னை அரவிந்த், மெடிசித், குறிஞ்சி பார்மா, அகத்தியர் ஹெர்பல் போன்ற பல நிறுவனங்கள் பல்லாண்டுகளாகச் சேவையாற்றி வருகின்றன. ஆண்மைக் குறைவு, மூட்டுவலி, தோல் நோய்கள், சுவாசக் கோளாறுகள், கல்லீரல் நோய்கள் போன்றவற்றுக்குச் சித்த மருத்துவமே பக்கவிளைவற்ற தீர்வைத் தரும் என்று மக்கள் நம்புகின்றனர். இதனை மேலும் அறிவியல் பூர்வமாக விரிவுபடுத்தச் சித்த மருத்துவர்கள் ஒன்றிணைய வேண்டும். அவ்வாறு செய்தால், மூலிகை விவசாயம் பெருகும், காடுகள் பாதுகாக்கப்படும், இயற்கை போற்றப்படும்.”
“சளி, இருமல், காய்ச்சல், தலைவலி, வயிற்று வலி போன்ற தீவிர பாதிப்புகளுக்கு (Acute diseases) சித்த மருந்துகள் மெதுவாகத்தான் வேலை செய்யும் என்பது தவறான கருத்து. இம்மாதிரியான நோய்களுக்குச் சித்த மருத்துவத்தில் உடனடி பலன் தரும் மருந்துகள் உள்ளன. ‘ஆடாதோடை மணப்பாகு’, ‘சுவாசக் குடோரி’, ‘நீர்க்கோவை மாத்திரை’, ‘தாளிசாதி வடகம்’ என நூற்றுக்கணக்கான மருந்துகள் உள்ளன. மருத்துவரின் ஆலோசனையோடு எடுத்தால் உடனடி நிவாரணம் பெறலாம்.”