சித்த மருத்துவ பல்கலைக்கழக மசோதாவில் ஆளுநரின் கருத்துக்கள் இடம்பெறாது – முதல்வர் திட்டவட்டம் | Siddha Medical University Bill Governors comments are against the Constitution CM speech

1379982
Spread the love

சென்னை: “தமிழ்நாடு சித்த மருத்துவ பல்கலைக்கழக சட்டமுன்வடிவு சட்டப்பேரவையால் நிறைவேற்றப்படும் முன்பு, அதுகுறித்து கருத்து தெரிவிக்கும் அதிகாரம் ஆளுநருக்கு வழங்கப்படவில்லை. இதில் ஆளுநர் அரசமைப்பு சட்டத்துக்கு முரணாக கருத்துக்களை தெரிவித்துள்ளார்” என தமிழக முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் விமர்சித்துள்ளார். மேலும், சித்த மருத்துவ பல்கலைக்கழக திருத்த மசோதாவில், ஆளுநரின் பரிந்துரையை ஏற்க முடியாது என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் பேசுகையில், “தமிழ்நாடு சித்த மருத்துவ பல்கலைக்கழக சட்டமுன்வடிவானது, நிதி சட்ட முன்வடிவு என்ற வகைப்பாட்டில் வருவதால் இதனை பேரவையில் ஆய்வு செய்ய ஆளுநரின் பரிந்துரை பெறப்பட வேண்டும். பொதுமக்களின் கருத்தை அறிந்து, வரப்பெற்ற கோரிக்கைகளை கவனத்தில் கொண்டு, மக்களாட்சியை ஒரு தூணாக கருதப்படும் நிர்வாகத்தால் இந்த சட்ட முன்வடிவு தயாரிக்கப்பட்டு, சட்டத்துறையால் சரிபார்க்கப்பட்டு, பல கட்டங்களாக பரிசீலிக்கப்பட்டு இந்த சட்டமுன்வடிவு ஆளுநருக்கு அனுப்பப்பட்டது.

ஆனால், ஆளுநர் அரசமைப்பு சட்டத்தின்படி பின்பற்றப்பட்டு வந்த வழக்கமான நடைமுறையை பின்பற்றாமல், இச்சட்ட முன்வடிவில் உள்ள பிரிவுகள் குறித்து தனது கருத்தை தெரிவித்து, அந்த கருத்துக்களை சட்டப்பேரவை உறுப்பினர்களின் கவனத்துக்கு பொருத்தமான முறையில் கொண்டுவர வேண்டுமென தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளார். இது அரசமைப்பு சட்டத்துக்கும், பேரவை விதிமுறைகளுக்கும் முரணானது.

ஒரு சட்டமுன்வடிவு பேரவையில் விவாதிக்கப்படுகையில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுக்கு மட்டுமே, அதில் திருத்தங்களை முன்மொழியவோ, விளக்கங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டால் திருத்தங்களை திரும்பப் பெறவோ, இல்லையெனில் வாக்கெடுப்பு கோரவோ அதிகாரம் உள்ளது. சட்டமுன்வடிவு பேரவையால் நிறைவேற்றப்படும் முன்பு, அதுகுறித்து கருத்து தெரிவிக்கும் அதிகாரம் ஆளுநருக்கு வழங்கப்படவில்லை.

எனவே, ஆளுநர் செய்தியில் இடம்பெற்றுள்ள கருத்துக்களை இந்த மாமன்றம் ஏற்றுக்கொள்ள இயலாது. ஆளுநரின் செய்தியில் ஆய்வு செய்யும் தொனியில் பொருத்தமான அல்லது தகுந்த எனும் வார்த்தைகளை சேர்ந்துள்ளது பேரவையின் மாண்பை குறைக்கக் கூடியது என்பதால் அது ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல.

ஆளுநர் அரசமைப்பு சட்டத்துக்கு முரணாக கருத்துக்களை தெரிவித்துள்ளார். சித்த மருத்துவ பல்கலைக்கழக சட்டமுன்வடிவை பேரவையில் ஆய்வு செய்ய ஆளுநர் அனுப்பியுள்ள செய்தியில் இருக்கக்கூடிய அவரின் கருத்துக்கள் மற்றும் பேரவையின் மாண்பை குறைக்கக்கூடிய வார்த்தைகள் அடங்கிய பகுதிகளை இந்த பேரவை நிராகரிக்கிறது. அந்த தீர்மானத்தை நான் முன்மொழிகிறேன், அதனை உறுப்பினர்கள் ஒருமனதாக நிறைவேற்றித்தர வேண்டும்” என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *