சித்த மருத்துவ பல்கலை. மசோதா குறித்த ஆளுநரின் கருத்து நிராகரிப்பு – பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம் | TN Governor RN Ravi’s Opinion Rejection Resolution Pass at Assembly

1380015
Spread the love

சென்னை: சித்த மருத்துவ பல்கலைக்கழக சட்ட மசோதா குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ள கருத்துகளை நிராகரித்து, தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டுவந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

சட்டப்பேரவையில், தமிழ்நாடு சித்த மருத்துவ பல்கலைக்கழக சட்ட முன்வடிவை மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் புதன்கிழமை அறிமுகம் செய்தார். சட்ட முன்வடிவை அறிமுகம் செய்ய அனுமதியளித்த நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சட்டப்பேரவையில் பேசியது: “தமிழ்நாடு சித்த மருத்துவப் பல்கலைக்கழக சட்டமுன்வடிவானது, நிதிச் சட்டமுன்வடிவு என்ற வகைப்பாட்டில் வருவதால், இதனை பேரவையில் ஆய்வு செய்ய ஆளுநர் பரிந்துரை பெறப்பட வேண்டும்.

பொதுமக்கள் கருத்து அறிந்து, கோரிக்கைகளை கவனத்தில் கொண்டு, சுகாதாரத் துறையால் சட்ட முன்வடிவு தயாரிக்கப்பட்டு, சட்டத் துறையால் சரிபார்க்கப்பட்டு, சுகாதாரத் துறை அமைச்சரால் பல கட்டங்களில் சரிபார்க்கப்பட்டு, சட்ட முன்வடிவின் பிரதி ஆளுநருக்கு அனுப்பப்பட்டது.

ஆனால், ஆளுநர் அரசமைப்புச் சட்டப்படியான வழக்கமான நடைமுறையைப் பின்பற்றாமல், இச்சட்டமுன்வடிவில் உள்ள சில பிரிவுகள் குறித்து தன்னுடைய கருத்தைத் தெரிவித்து, அந்தக் கருத்துகள் பேரவையில் அறிமுகப்படுத்தப்படும்போது, பேரவை உறுப்பினர்களுடைய கவனத்துக்கு கொண்டுவரப்பட வேண்டும் என்று தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளார். இது அரசியல் சட்டத்துக்கும், நமது சட்டப்பேரவை விதிமுறைகளுக்கும் முரணானது.

ஒரு சட்டமுன்வடிவு பேரவையில் விவாதிக்கப்படும்போது, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பேரவை உறுப்பினர்களுக்கு மட்டுமே அதில் திருத்தங்களை முன்மொழியவும், அதற்கான விளக்கங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டால் திருத்தங்களைத் திரும்பப் பெறவும், இல்லையெனில், வாக்கெடுப்பைக் கோரவும் அதிகாரம் உள்ளது.

இத்தகைய சட்டமுன்வடிவு பேரவையால் நிறைவேற்றப்படுவதற்கு முன்பு அதன்மீது கருத்துகளைத் தெரிவிக்கும் அதிகாரம் ஆளுநருக்கு வழங்கப்படவில்லை. எனவே, ஆளுநரிடம் இருந்து வந்துள்ள செய்தியில் இடம்பெற்றுள்ள கருத்துகளை இந்த மாமன்றம் ஏற்றுக்கொள்ள இயலாது.

இந்தப் பேரவை சட்டமுன்வடிவுகளை ‘பொருத்தமற்ற முறையில்’ அல்லது ‘தகுந்த முறையில் அல்லாமல்’ ஆய்வு செய்யும் தொனியில், ‘பொருத்தமான’ அல்லது ‘தகுந்த’ எனும் பொருள்படக் கூடிய வார்த்தையை ஆளுநர் குறிப்பிட்டிருப்பது, இந்தப் பேரவையின் மாண்பை குறைக்கக்கூடிய கருத்து. அது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல.

சட்டம் இயற்றுவது, இப்பேரவைக்கு மட்டுமே உள்ள அதிகாரம். ஆகவே, ஆளுநரிடம் இருந்து வந்துள்ள அந்தக் கருத்துகள் அடங்கிய செய்தி அவைக்குறிப்பில் இடம் பெறுவதை மாநில சுயாட்சியில் நம்பிக்கை கொண்ட எந்த ஓர் உறுப்பினரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதால் அந்தக் கருத்துகளை நான் இங்கே பதிவுசெய்ய விரும்பவில்லை.

எனவே, “2025-ம் ஆண்டு தமிழ்நாடு சித்த மருத்துவப் பல்கலைக்கழகச் சட்டமுன்வடிவை பேரவையில் ஆய்வு செய்வதற்கு ஆளுநர் அனுப்பியுள்ள செய்தியில் இருக்கக்கூடிய அவரின் கருத்துகள் மற்றும் பேரவையின் மாண்பைக் குறைக்கக்கூடிய அந்த வார்த்தை அடங்கிய பகுதிகளை இப்பேரவை நிராகரிக்கிறது” என்னும் தீர்மானத்தை மொழிகிறேன். மாண்புமிகு உறுப்பினர்கள் அனைவரும் இதனை ஒருமனதாக நிறைவேற்றித் தரவேண்டும்” என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார். இதையடுத்து, குரல் வாக்கெடுப்பு மூலம் முதல்வரின் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *