புது தில்லி: பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் என்பது போல, தில்லியைச் சேர்ந்த பெண் தாதாவாக செயல்பட்டு வந்த ஸோயா கான் ரூ.1 கோடி மதிப்புள்ள போதைப்பொருள்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
போதைப்பொருள் கும்பல் தலைவன் ஹஷிம் பாபாவின் மனைவியான ஸோயா கான், சிறையில் இருக்கும் தனது கணவருக்காக, இந்த ஒட்டுமொத்த ரௌடி கும்பலையும் நிர்வகித்து வந்தாலும், இவரது பெயர் எந்த குற்றச்சம்பவங்களிலும் தொடர்பில் இல்லாதவாரு பார்த்துவந்ததால், காவல்துறையினரால் இவரை நெருங்க முடியாமல் இருந்தது.
இதுவரை அவருக்கு எதிராக ஒரு குற்றச்சாட்டும், ஆதாரமும் காவல்துறைக்குக் கிடைக்காமல் இருப்பதுதான் மிகப்பெரிய பின்னடைவாக இருந்து வந்துள்ளது.
கடத்தல் முதல் கொலை வரை பல வழக்குகள் ஹஷிம் பாபா மீது உள்ளது. பாபா கைது செய்யப்பட்ட பிறகு ஒட்டுமொத்த ரௌடி கும்பலையும் தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளார் ஸோயா கான்.
போதைப் பொருள் கடத்தலை முக்கியத் தொழிலாக இந்த கும்பல் செய்து வருகிறது. ஆனால், சினிமாவில் காட்டும் நம்ம ஊர் பெண் தாதாக்களைப் போல அல்லாமல், ஸோயா பார்க்க சினிமா நட்சத்திரம் போல மிகப்பெரிய விஐபிகள் கொடுக்கும் விருந்து கேளிக்கைகளில் பங்கேற்பது, விலை உயர்ந்த கார், ஆடை அலங்காரம் என கோடீஸ்வர வாழ்க்கையை வாழ்ந்து வந்தார்.
அது மட்டுமல்ல, எப்போதும் ஆயுதம் தாங்கிய நான்கு பேரின் பாதுகாப்புடன்தான் ஸோயா வலம் வந்துள்ளார்.
இவருக்கு சமூக ஊடகத்தில் ஏராளமான பின்தொடர்வோர் இருப்பது வேறுகதை. எது எப்படியிருந்தாலும் தனது கணவர் அடைக்கப்பட்டிருக்கும் திஹார் சிறைக்கு அவர் அடிக்கடி செல்வதும், அங்குதான், தொழில் ரகசியங்களை சமிக்ஞைகள் வாயிலாக பாபா தனது மனைவிக்கு சொல்வதாகவும், கும்பலின் நிதி மற்றும் செயல்பாடுகள் அனைத்தையும் இருவரும் பேசிக் கொள்வார்கள் என்றும் கூறப்படுகிறது.
இந்த கும்பல் மூலம் மிகப்பெரிய அளவில் போதைப் பொருள்களைக் கடத்தி கோடிக்கணக்கில் வருவாய் ஈட்டிவந்ததும், அதில் ஸோயா உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.