சினிமா, ஹோட்டல், டூர் எல்லாவற்றுக்கும் கடன், ‘இம்சை’யை இனிமையாக நினைத்து ஏமாறும் ‘இ.எம்.ஐ தலைமுறை’!

Spread the love

இன்றைய தலைமுறையினரின் பண மேலாண்மை, முந்தைய தலைமுறையிலிருந்து முற்றிலும் வேறுபட்டதாக மாறிவருகிறது. முன்பெல்லாம் கடன் என்றாலே பத்தடி தள்ளி நிற்பார்கள். அப்படியே கடன் வாங்கினாலும் அது முக்கியமான, அவசரத் தேவைகளுக்கானதாகவே இருக்கும். இன்றோ, கடன் என்பது, பலரின் வாழ்க்கைமுறையில் ஒரு பகுதியாகவே மாறிவிட்டது. இன்றைய இளைஞர்களில் பெரும்பாலானோர், கடனை வசதியான வாழ்க்கைக்கான தீர்வாகவே பார்க்கத் தொடங்கியுள்ளனர்.

‘வேலைக்குச் சேர்ந்ததுமே தனிநபர் கடன் வாங்குவது அதிகரித்துள்ளது. அவற்றில் பெரும்பாலான கடன்கள் வாழ்க்கைமுறை செலவுகளுக்காகவே வாங்கப்படுகின்றன’ என்கின்றன புள்ளிவிவரங்கள். இந்தப் போக்கு, இளைய சமுதாயத்தின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கிவிடுமோ என்கிற அச்சத்தை ஏற்படுத்துகிறது. மொபைல், லேப்டாப், பயணம் மற்றும் ஷாப்பிங் என எல்லாவற்றிற்கும் இளைஞர்கள் நாடுவது… இ.எம்.ஐ அல்லது கிரெடிட் கார்டு. ‘இப்போது அனுபவிப்போம்… பிறகு, பார்த்துக்கொள்ளலாம்‘ என்ற மனநிலை யிலேயே பெரும்பாலானோர் உள்ளனர். ஆனால், ‘பிறகு பார்த்துக்கொள்ளலாம்’ என்பதில்தான் பிரச்னையே இருக்கிறது என்பதை அவர்கள் உணர்வதில்லை.

‘‘இளைஞர்கள் அதிகம் கடன் வாங்க, சமூக ஊடகங்கள் ஏற்படுத்தும் அழுத்தம் ஒரு முக்கியக் காரணம்’’ என்கிறார்கள் உளவியலாளர்கள். ‘‘பிறரால் பகிரப்படும் போஸ்ட்களால், அவர்கள் வாழ்க்கையோடு தங்கள் வாழ்க்கையை ஒப்பிடும் பழக்கம் அதிகரித்துள்ளது. முன்பெல்லாம் வீடு, கார் போன்றவற்றை வாங்குவதில்தான் மற்றவர்களோடு போட்டி போடுவார்கள். இன்றோ, சினிமா, ஹோட்டல், டூர் என எல்லா விஷயங்களிலும் போட்டி விரிந்துள்ளது. இதனால், தேவையற்ற செலவுகளும் கடன்களுமே அதிகரிக்கின்றன.

பகட்டான ‘ஷோ ஆஃப்’ வாழ்க்கைக்குப் பின்னால் இருக்கும் கடன் சுமை பற்றி, இளைஞர்கள் யோசிப்பதில்லை. குறுகியகால மகிழ்ச்சியை நாடுகிறார்களே தவிர, நீண்டகால நிலையான மகிழ்ச்சியைப் பற்றி நினைப்பதில்லை. சுற்றுலா அனுபவம் சில நாள்களில் முடிந்துவிடும்; அதற்கு வாங்கிய கடனுக்கான இ.எம்.ஐ, பல மாதங்கள் தொடரும். கல்வி, வீடு, தொழில் தேவைகளுக்காக வாங்கும் கடன்கள், எதிர்காலத்தில் பயன்தரக் கூடியவை. ஆனால், வாழ்க்கை முறைச் செலவுகளுக்காக வாங்கும் கடன்கள், இப்போதைய வருமானத்தை அழிப்பதோடு, எதிர்கால வாழ்க்கையையும் மோசமான நிலைக்குத் தள்ளிவிடும் என்பதே நிதர்சனம்’’ என்று எச்சரிக்கிறார்கள், உளவியலாளர்கள்.

‘வாழ்க்கையை அனுபவிக்கக் கூடாதா?’ என்று கேட்டால், நிச்சயமாக அனுபவிக்கலாம். ஆனால், அந்தக் கொண்டாட்டங்கள் கடனில் நடப்பவையாக இருக்கக் கூடாது. கடன், எதிர்கால வருமானத்தை முன்கூட்டியே அழித்துவிடும். சேமிப்பும் முதலீடும்தான் எதிர்கால வாழ்க்கையைப் பாதுகாக்கும் என்பதுதான் பல்லாண்டு அனுபவங்கள். இதை இளைஞர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

இளைஞர்களே… இப்போதுகூட விழித்துக்கொள்ள அவகாசம் இருக்கிறது. கடனில் சிக்கித்தவிக்கும் இம்சை வாழ்க்கையா… சேமிப்பு மற்றும் முதலீடுகளால் உருவாகும் இனிமையான வாழ்க்கையா… எதைத் தேர்வு செய்யப் போகிறீர்கள்?!

– ஆசிரியர்

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *