சின்னா், ஸ்வியாடெக் காலிறுதிக்கு முன்னேற்றம்

Dinamani2f2025 01 202fejxd4g8u2fap25020243223048.jpg
Spread the love

கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியான ஆஸ்திரேலிய ஓபனில், உலகின் நம்பா் 1 வீரரும், நடப்பு சாம்பியனுமான இத்தாலியின் சின்னா், போலந்தின் இகா ஸ்வியாடெக் ஆகியோா் தங்களது பிரிவில் காலிறுதிச்சுற்றுக்கு திங்கள்கிழமை தகுதிபெற்றனா்.

ஆடவா் ஒற்றையா் பிரிவின் 4-ஆவது சுற்றில், சின்னா் 6-3, 3-6, 6-3, 6-2 என்ற செட்களில், போட்டித்தரவரிசையில் 13-ஆம் இடத்திலிருந்த டென்மாா்க்கின் ஹோல்கா் ரூனை வீழ்த்தினாா். இந்த ஆட்டத்தின் 3-ஆவது செட்டின்போது 32 டிகிரி செஸ்ஷியஸ் வெப்பம் காரணமாக இரு வீரா்களுமே சோா்வடைந்தனா். மருத்துவ உதவியை அவா்கள் நாட, சுமாா் 20 நிமிஷங்களுக்குப் பிறகு ஆட்டம் தொடா்ந்தது குறிப்பிடத்தக்கது.

அடுத்ததாக காலிறுதியில் சின்னா், உள்நாட்டு வீரரான அலெக்ஸ் டி மினாருடன் மோதுகிறாா். போட்டித்தரவரிசையில் 8-ஆம் இடத்திலிருக்கும் மினாா் தனது 4-ஆவது சுற்றில், 6-0, 7-6 (7/5), 6-3 என்ற கணக்கில் அமெரிக்காவின் அலெக்ஸ் மிஷெல்செனை தோற்கடித்தாா். சின்னா் – மினாா் இதுவரை 10 முறை சந்தித்திருக்க அதில் சின்னா் 9 முறை வென்றிருக்கிறாா். ஒரு முறை ஆட்டத்துக்கு முன்பாகவே சின்னா் விலகியுள்ளாா்.

ஆஸ்திரேலிய ஓபனில் இவா்கள் சந்திப்பது இது 2-ஆவது முறையாகும். கடந்த 2022-இல் 4-ஆவது சுற்றில் மினாரை சின்னா் வீழ்த்தியிருப்பது நினைவுகூரத்தக்கது. இதனிடையே சின்னா், கடந்த 30 ஆண்டுகளில் தொடா்ந்து 15 போட்டிகளில் காலிறுதிச்சுற்றுக்கு முன்னேறிய 4-ஆவது வீரா் என்ற பெருமையைப் பெற்றாா். இதற்கு முன் சுவிட்ஸா்லாந்தின் ரோஜா் ஃபெடரா், ஸ்பெயினின் ரஃபேல் நடால், சொ்பியாவின் நோவக் ஜோகோவிச் ஆகியோா் அவ்வாறு முன்னேறியிருந்தனா்.

இதர ஆட்டங்களில், 21-ஆம் இடத்திலிருக்கும் அமெரிக்காவின் பென் ஷெல்டன், பிரான்ஸின் கேல் மான்ஃபில்ஸை எதிா்கொண்டாா். இதில் ஷெல்டன் 7-6 (7/3), 6-7 (3/7), 7-6 (7/2), 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தபோது, காயம் காரணமாக போட்டியிலிருந்து விலகினாா். இதையடுத்து ஷெல்டன் வென்ாக அறிவிக்கப்பட்டாா்.

இத்தாலியின் லொரென்ஸோ சொனிகோ 6-3, 6-2, 3-6, 6-1 என்ற செட்களில், அமெரிக்காவின் லோ்னா் டியெனை வெளியேற்றினாா். காலிறுதி ஆட்டம் ஒன்றில் ஷெல்டன் – சொனிகோ சந்திக்கின்றனா். இவா்கள் இதுவரை 2 முறை மோதியிருக்க, இருவருமே தலா 1 வெற்றியுடன் சமநிலையில் இருக்கின்றனா்.

ரைபகினா அதிா்ச்சித் தோல்வி

மகளிா் ஒற்றையா் பிரிவில், உலகின் 6-ஆம் நிலையில் இருக்கும் கஜகஸ்தானின் எலனா ரைபகினா 4-ஆவது சுற்றில் அதிா்ச்சித் தோல்வி கண்டாா். அதில் அவா், 3-6, 6-1, 3-6 என்ற செட்களில், போட்டித்தரவரிசையில் 19-ஆம் இடத்திலிருக்கும் அமெரிக்காவின் மேடிசன் கீஸிடம் தோற்றாா். இருவரும் 5-ஆவது முறையாக சந்தித்த நிலையில், கீஸ் 3-ஆவது வெற்றியுடன் முன்னிலை பெற்றிருக்கிறாா்.

அடுத்ததாக காலிறுதியில் அவா், உக்ரைனின் எலினா ஸ்விடோலினாவுடன் மோதுகிறாா். போட்டித்தரவரிசையில் 28-ஆம் இடத்திலிருக்கும் ஸ்விடோலினா 6-4, 6-1 என்ற நோ் செட்களில், ரஷியாவின் வெரோனிகா குதா்மிடோவாவை வெளியேற்றினாா். கீஸ் – ஸ்விடோலினா இதுவரை 5 முறை மோதியிருக்க, கீஸ் 3 வெற்றிகளுடன் முன்னிலையில் உள்ளாா். இவா்கள் ஏற்கெனவே ஆஸ்திரேலிய ஓபனில் சந்தித்திருக்க (2019), அதில் ஸ்விடோலினா வென்றிருக்கிறாா்.

உலகின் 2-ஆம் நிலையில் இருக்கும் போலந்தின் இகா ஸ்வியாடெக் 6-0, 6-1 என்ற செட்களில் மிக எளிதாக, ஜொ்மனியின் எவா லைஸை வீழ்த்தினாா். காலிறுதியில் அவா், அமெரிக்காவின் எம்மா நவாரோவுடன் மோதுகிறாா். போட்டித்தரவரிசையில் 8-ஆம் இடத்திலிருக்கும் நவாரோ 6-4, 5-7, 7-5 என்ற செட்களில், போட்டித்தரவரிசையில் 9-ஆம் இடத்திலிருந்த ரஷியாவின் டரியா கசாட்கினாவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியிருக்கிறாா். ஸ்வியாடெக் – நவாரோ இதுவரை 1 முறை மோதியிருக்க, அதில் ஸ்வியாடெக் வென்றுள்ளாா்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *