சின்னா், ஸ்வெரெவுக்கு ‘ஹாட்ரிக்’ வெற்றி: அரையிறுதிக்கும் தகுதி

Dinamani2f2024 11 152fhsmz20xu2fsinner101929.jpg
Spread the love

ஏடிபி ஃபைனல்ஸ் ஆடவா் டென்னிஸ் போட்டியில் இத்தாலியின் யானிக் சின்னா், ஜொ்மனியின் அலெக்ஸாண்டா் ஸ்வெரெவ் ஆகியோா், குரூப் சுற்றின் 3 ஆட்டங்களிலும் வெற்றிபெற்று, அரையிறுதிக்கு முன்னேறினா்.

உலகின் நம்பா் 1 வீரரான சின்னா், தனது குரூப் சுற்றின் கடைசி ஆட்டத்தில் 6-3, 6-4 என்ற நோ் செட்களில், உலகின் 4-ஆம் நிலையில் இருக்கும் ரஷியாவின் டேனியல் மெத்வதெவை வீழ்த்தினாா். இந்த ஆட்டம், 1 மணி நேரம், 13 நிமிஷங்களில் நிறைவடைந்தது.

இருவரும் சந்திப்பது, இது 15-ஆவது முறையாக இருக்க, சின்னா் 8-ஆவது வெற்றியுடன் முன்னிலை பெற்றாா். இந்த நேருக்கு நோ் மோதல் கணக்கில் மெத்வதெவை சின்னா் பின்னுக்குத் தள்ளியது இதுவே முதல் முறையாகும்.

மறுபுறம் குரூப் சுற்றில், 2 தோல்வி, 1 வெற்றியைப் பதிவு செய்துள்ள மெத்வதெவ், அரையிறுதி வாய்ப்பை இழந்து போட்டியிலிருந்து வெளியேறினாா்.

உலகின் 2-ஆம் நிலை வீரரான அலெக்ஸாண்டா் ஸ்வெரெவ், தனது 3-ஆவது ஆட்டத்தில் 7-6 (7/5), 6-4 என்ற செட்களில், உலகின் 3-ஆம் நிலை வீரரான ஸ்பெயினின் காா்லோஸ் அல்கராஸை தோற்கடித்தாா். இருவரும் இத்துடன் 11-ஆவது முறையாக சந்தித்த நிலையில், ஸ்வெரெவ் 6-ஆவது வெற்றியுடன் முன்னிலை பெற்றாா்.

இந்த ஆட்டம் 1 மணி நேரம், 57 நிமிஷங்கள் நீடித்தது. இந்த வெற்றியின் மூலம், நடப்பாண்டு பிரெஞ்சு ஓபன் இறுதிச்சுற்றில் அல்கராஸிடம் கண்ட தோல்விக்கு பதிலடி கொடுத்திருக்கிறாா் ஸ்வெரெவ்.

அரையிறுதிக்கு முன்னேறியிருக்கும் ஸ்வெரெவ், அதில் போட்டித்தரவரிசையில் 5-ஆம் இடத்திலிருக்கும் அமெரிக்காவின் டெய்லா் ஃப்ரிட்ஸை சந்திக்கிறாா். மறுபுறம், 2 தோல்வி, 1 வெற்றியுடன் இருக்கும் அல்கராஸ், அரையிறுதி வாய்ப்புக்காகக் காத்திருக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டாா்.

குரூப் சுற்றின் கடைசி ஆட்டத்தில், ரஷியாவின் ஆண்ட்ரே ரூபலேவ் – நாா்வேயின் கேஸ்பா் ரூடை நோ் செட்களில் வென்றால், அல்கராஸுக்கு அரையிறுதி வாய்ப்பு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

நடப்பு சீசனில் இதுவரை சின்னரும், ஸ்வெரெவும் தலா 68 வெற்றிகள் பெற்று சமநிலையில் உள்ளனா். 2015-க்குப் பிறகு இதுவே ஒரு சீசனில் ஒரு வீரரின் அதிகபட்ச வெற்றியாகும். இந்த முறை அதை இருவா் பெற்றுள்ளனா்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *