பட மூலாதாரம், AFP
சிபிஐ இயக்குனர் ரஞ்சித் சின்ஹா மீது தொடுக்கப்பட்ட வழக்கின் விசாரணைக்கு அரசாங்கத் தரப்பு சிறப்பு வழக்கறிஞர் உதவ வேண்டும் என்று கூறி இந்திய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிபிஐ எனப்படும் மத்திய புலனாய்வு அமைப்பால் மேற்கொள்ளப்படும் வழக்கு விசாரணைகளில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களை, சிபிஐ இயக்குனர் ரஞ்சித் சின்ஹா தனிப்பட்ட முறையில் தொடர்ந்து சந்தித்து வந்துள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இதற்காக உச்சநீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கு அடிப்படை ஆதாரமற்றது என்று கூறியும், தன்னை இதிலிருந்து விடுவிக்க கோரியும் ரஞ்சித் சின்ஹா தரப்பில் கோரப்பட்டிருந்தது.
இதை ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம், வழக்கின் விசாரணையை வரும் அக்டோபர் மாதம் 10ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
அப்போது இந்த வழக்கு தொடர்பான விசாரணையை நீதிமன்றத்தில் மேற்கொள்ள அரசாங்க தரப்பு சிறப்பு வழக்கறிஞர் உதவ வேண்டும் என்று கூறியும் உத்தரவிட்டது.
பின்னணி
இந்தியாவில் இரண்டாம் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடைபெற்றதாக கூறி நடைபெற்று வரும் வழக்கு உள்ளிட்ட பல்வேறு ஊழல் குற்றச்சாட்டு தொடர்புடைய வழக்குகளில், குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் சிலரை சிபிஐ இயக்குனர் ரஞ்சித் சின்ஹா தனிப்பட்ட முறையில் சந்தித்தார் என்ற குற்றச்சாட்டு தொடர்பாக, வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் தாக்கல் செய்த பொது நலன் மனுக்கள் மீதான விசாரணை முன்னதாக நடைபெற்றபோது, அதற்கு ஆதராமாக ரஞ்சித் சின்ஹா இல்லத்தின் வருகை பதிவை நீதிமன்றத்தில் அளித்தார்.
இந்த விவரங்களை பிரசாந்த் பூஷனுக்கு யார் அளித்தது என்பதை அவர் நீதிமன்றத்தில் தெரிவிக்க கோரி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
தொடர்ந்து, அந்த உத்தரவை ஏற்று பெயர் மற்றும் அவரது விவரங்களை தெரிவிக்க முடியாதது குறித்தான தனது இயலாமையை வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் வெளியிட்டார்.
அதற்காக நிபந்தனையற்ற மன்னிப்பையும் அவர் அப்போது கோரினார்.
இவ்வாறு பிரசாந்த் பூஷன் பெயரை வெளியிட மறுத்துள்ள நிலையில், ரஞ்சித் சின்ஹா தன்னை இந்த வழக்கிலிருந்து விடுவிக்க கோரினார்.
இந்நிலையில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் எச்.எல்.தத் மற்றும் எஸ்.ஏ.பாப்டே ஆகியோரை உள்ளடக்கிய அமர்வு முன்பாக இன்று இந்த வழக்கின் விசாரணை நடைபெற்றபோது, பிரசாந்த் பூஷன் மனு மீதான விசாரணை தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
ரஞ்சித் சின்ஹா வாதம்
அப்போது ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணையில் தடை ஏற்படுத்தவில்லை என்றும், யாருக்கும் சாதகமாக செயல்படவில்லை என்றும் ரஞ்சித் சின்ஹா தரப்பில் தெரிவிக்கப்பட்டதை நீதிபதிகள் ஏற்க மறுத்தார்கள்.
அதே சமயம் அவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பாக, அரசாங்கத் தரப்பின் சிறப்பு வழக்கறிஞர் ஆனந்த் க்ரூவரின் உதவி பெறப்பட்டு, பின்னர் முடிவுகள் எடுக்கப்படும் என்று அமர்வு தெரிவித்துள்ளது.
மேலும் அதற்காக இது தொடர்புடைய சிபிஐயின் வழக்கு கோப்புகள் மற்றும் ரஞ்சித் சின்ஹா மீதான குற்றச்சாட்டுக்காக வழங்கப்பட்ட ஆதாரங்களான வருகைப்பதிவேடு உள்ளிட்ட அனைத்தையும், அரசாங்க சிறப்பு வழக்கறிஞர் ஆனந்த் க்ரூவரிடம் அளிக்க வேண்டும் எனவும் அந்த அமர்வு கூறியுள்ளது.
இந்த வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணை நடைபெறும் தினமான அக்டோபர் 10ஆம் தேதிக்கு முன்பாக இந்த விவரங்கள் அவரிடம் இருந்து பெறப்படும்.