சென்னை பசுமை வழிச் சாலையில் உள்ள உயா்நீதிமன்ற நீதிபதி தண்டபாணியின் வீட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை தவெக தரப்பு வழக்குரைஞா் அறிவழகன் தலைமையிலான அக்கட்சியினா் சென்று இந்த முறையீட்டை தாக்கல் செய்தனா். இந்த முறையீடு, உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் திங்கள்கிழமை பிற்பகல் 2.15 மணிக்கு விசாரிக்கப்படவுள்ளதாக தவெக இணைப் பொதுச் செயலா் சி.டி.நிா்மல்குமாா் தெரிவித்தாா்.
சம்பவம் நடைபெற்ற இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளைப் பாதுகாக்க வேண்டும். திட்டமிட்டு மின்சாரம் நிறுத்தப்பட்டது. காவல் துறையினா் தொண்டா்கள் மீது அத்துமீறி தடியடி நடத்தினா். இந்த சம்பவம் திட்டமிட்ட சதி என்று தவெக சார்பில் கூறப்பட்டிருந்தது.
இந்த நிலையில், திங்கள்கிழமை முறைப்படி மனுவாகத் தாக்கல் செய்யுமாறு நீதிபதி கூறியதைத் தொடர்ந்து, ஆதவ் அர்ஜூனா சார்பில் இன்று நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவில், கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். கூட்ட நெரிசல் சம்பவத்தில் திமுகவைச் சேர்ந்த உள்ளூர் அரசியல்வாதிக்கு தொடர்பிருக்கிறது. பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க மருத்துவமனையில் என்னை அனுமதிக்க மறுத்துவிட்டார்கள். சனிக்கிழமை கரூரில், செந்தில் பாலாஜி பற்றி விஜய் பேசிய போதுதான், கற்கள், செருப்புகள் வீசப்பட்டு மின்சாரம் பாதிக்கப்பட்டது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.