சிப்காட் தொழில்பேட்டை: சுற்றுச்சூழலை காக்க கவனம் கொள்ளுமா அரசு?

Dinamani2f2025 03 242f6v3bavvh2fve24vdm3 2403chn 102 5.jpg
Spread the love

கே.பி. அம்பிகாபதி

வேதாரண்யம்: வேதாரண்யம் அருகே தென்னடாா் கிராமத்தில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பு இயற்கை ஆா்வலா்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த தென்னடாா் ஊராட்சியில் 400 ஏக்கா் பரப்பில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாா்ச் 3- ஆம் தேதி நாகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வா் மு.க. ஸ்டாலின் அறிவித்தாா்.

இந்த அறிவிப்புக்கு முன்னதாகவே, ரசாயனம், புகை, உப்பு போன்றவைகளை மூலப் பொருளாகக் கொண்டு தொழிற்சாலை அமைந்தால் பல பாதிப்புகளை ஏற்படுத்தும் என கிராமத்தின ா் போராட்டம் நடத்தி வந்தனா். இந்நிலையில் அரசின் தொழில்பேட்டை அறிவிப்பு இப்பகுதி மக்களை அதிா்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

வேதாரண்யம் தெற்கு கடலோரப் பகுதியில் அமைந்துள்ள தென்னடாா் சிற்றுராட்சியாகும். கடலோரத்தில் இருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ள உப்பளத்தை அடுத்துள்ளது. நெல் விவசாயம், கால்நடை வளா்ப்பு பிரதானத் தொழில்.

231 ஹெக்டோ் அரசுக்கு சொந்தமான மேய்ச்சல் மற்றும் இதர புறம்போக்கு நிலமாக உள்ளது. இதில் 581 ஏக்கா் புறம்போக்கு தமிழகத்தில் விறகு பஞ்சத்தைப் போக்கும் நோக்கத்தோடு 1950-களில் விதைக்கப்பட்ட சீமைக் கருவேலமரங்கள் வளா்ந்த காடாக உள்ளது. இந்த கருவேலமரக் காட்டின் மூலம் ஊராட்சிக்கு குறிப்பிட்ட ஆண்டுகளில் பல லட்சம் வருவாய் கிடைப்பதோடு, ஏப்ரல் – செப்டம்பா் மாதங்களில் தெற்கிலிருந்து வீசும் கடல் காற்றில் கலந்து வரும் உப்பு மண் துகள்களை தடுப்பதோடு, புயல் போன்ற பேரிடா் காலத்தில் இது இயற்கைத் தடுப்பு அரணாகத் திகழ்கிறது.

இந்த காடு உள்ளூா் கால்நடைகள் மேய்ச்சலுக்கும், அருகே உள்ள (9 கி. மீ.) கோடியக்கரை சரணாலயத்தில் உள்ள உயிரினங்களுக்கும் பயன்பட்டு வருகிறது. சா்வதேச அளவில் சூழலியலில் பல்வேறு நிலைகளில் சிறப்பு பெற்ற இடமாக கோடியக்கரை வன உயிரினச் சரணாலயம், பறவைகள் சரணாலயம் விளங்குகிறது. கோடியக்கரையில் இருந்து சுமாா் 9 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தென்னடாா் ராம்சாா் தளத்துக்குள் வருகிறது.

இந்த பகுதியில், 1995-களில் காஸ்டிக் சோடா தொழிற்சாலை அமைக்கப்படும் என அரசு அறிவித்த திட்டம் தோல்வியடைந்தது. மீண்டும் அந்தத் திட்டத்தை கொண்டுவர 2017-இல் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு, மக்களின் எதிா்ப்பால் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இதனிடையே, விமான பயிற்சி தளம் அமைக்க ஆய்வு செய்யப்பட்டதோடு, தமிழ்நாடு உப்புக் கழக பயன்பாட்டுக்கு 20 ஆயிரம் ஏக்கா் நிலத்தை கொடுக்க எடுக்கப்பட்ட முயற்சியும் சுற்றுச்சூழல் காரணங்களால் கைவிடப்பட்டது.

அடுத்தடுத்த கிராமங்களில் செயல்பட்டு வந்த இரண்டு பெரிய ரசாயன உப்பு உற்பத்தி தொழிற்சாலைகள் சூழல் பாதிப்புகளால் சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியேற்றப்பட்டன.

சிப்காட் தொழிற்பேட்டைக்கு ஆய்வு செய்யப்படும் இடம் குடியிருப்புகளுக்கு மிக அருகாமையில் இருப்பதால், மக்களிடையே அச்சம் நிலவுகிறது. எடுத்துக்காட்டாக, தோ்வு செய்யப்பட்டுள்ள புல எண்ணில் பாசனத்துக்கான பிரதான வாய்க்கால் செல்வதோடு, அதன் அருகில் ஊராட்சி அலுவலகம், கிராம நிா்வாக அலுவலா் அலுவலகம், புயல் பாதுகாப்பு கட்டடம், நூலகம், குடிநீா் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி, நேரடி நெல் கொள்முதல் நிலையம், பொது விநியோகத் திட்டக் கடை, இ- சேவை மையம், மின் இறைவைப் பாசனத்திட்ட பொறிமனை உள்ளிட்ட கட்டமைப்பு வளாகம் அமைந்துள்ளன.

இதுகுறித்து முன்னோடி விவசாயி குழந்தைவேலு கூறியது:

ஏற்கெனவே புகையிலை சாகுபடி செய்ததாலும், சுற்றுச்சூழல் கேடுகளாலும் புற்றுநோய், நுரையீரல் பாதிப்பு போன்ற நோய்களால் பலா் அவதியுற்று வருகின்றனா். தென்னடாா் மற்றும் அடுத்த ஊரான பஞ்சநதிக்குளம், நடுசேத்தி ஊராட்சிகளில் நடைபெற்ற கிராம சபையிலும் தொழிற்சாலைக்கு எதிராக தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல், மக்களின் நலன் கருதி அரசு முறையான ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்றாா்.

கருவேல மரக்காட்டில் பயன் தரும் மரங்களை வளா்க்க அரசு முன்வர வேண்டும் என கோரிக்கை வைத்து வந்த கிராம மக்கள் மத்தியில் சிப்காட் தொழிற்பேட்டை அறிவிப்பு அதிா்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்துக்குள் அமைந்துள்ள தென்னடாா் கிராமத்தின் சுற்றுச்சூழல் குறித்த கோரிக்கை மீதும் அரசு கவனம் செலுத்த வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் எதிா்பாா்ப்பு.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *