இதன் மூலம் தினசரி சிமெண்ட் மூட்டைகள், இயந்திரத் தளவாடங்கள் சேலம் வழியாக நேரடியாக மேட்டூர் நிலையத்துக்கே வந்தன. மழையிலிருந்து பாதுகாக்க பெரிய சரக்ககம் கட்டப்பட்டதால் பொருட்கள் சேதமின்றி கையாளப்பட்டன.
ஆரம்பகால பேச்சுவார்த்தை மற்றும் திட்டமிடலில் குறிப்பிடத்தக்க அளவு நேரம் விரயமானாலும் ஒட்டுமொத்த திட்டம் விரைவாக முடிந்தது மகிழ்ச்சியான தருணமே!
சாலைப் போக்குவரத்தை விட இந்த இருப்புப் பாதை மிகுந்த பலனை பல விதங்களில் அளித்தது எனலாம். அவை கண்கூடாக தெரிந்தன. முழு அளவில் பின்னாளில் அணை கட்டுமானம் நடந்து கொண்டிருந்தபோது ஒவ்வொரு நாளும் இந்த ரயில் பாதைகளின் வழியாக சிமெண்ட் , இயந்திரத் தளவாடங்கள் தொடர்ந்து மெட்ராஸ் மற்றும் ‘ஷகாபாத்’ இடங்களிலிருந்து சிமெண்ட் வந்த வண்ணம் இருந்தன.
சிமெண்ட் மூட்டைகள் எந்தவித மாற்றும் வேலைகள் இடையில் இன்றி அப்படியே மேட்டூருக்கு வந்து சேர்ந்தது. மூட்டைகளை கீழ இறக்கும் பணி சுலபமாக இருந்தது. ஒரு பெரிய சரக்ககம் கட்டி அமைக்கப்பட்டு மேட்டூர் ரயில் நிலையத்தில் அதன் உள்ளே ரயில் வந்து நின்று சுலபமாக இறக்கும் வசதி ஏற்படுத்தித் தந்ததால் மழையிலிருந்து சிமெண்ட் நனைந்து சேதாரம் ஆகாமல் முழுவதும் காப்பாற்றப்பட்டது.
ரயில் பாதையின் இருபுறத்திலும் அகலமான மேடை மற்றும் ரயில் நிலையத்திலிருந்து அமைக்கப்பட்ட இரண்டு அடி இரயில் டிராம் மூலம் அணை கட்டப்படும் வெவ்வேறு நிலைகளுக்கு சுலபமாக ரயிலில் இருந்து 10 வேகன்கள் கொண்ட ரயிலில் மாற்றிக் கொண்டு செல்லப்பட்டது.
ரயில் நிலையத்துக்கு மிகவும் அருகில் “எல்லீஸ் பாலம்” அமைந்திருந்தது கவனிக்கத்தக்கது. உண்மையாக சொல்வதென்றால் சில சமயங்களில் அதாவது கனரக இயந்திரங்கள் என ஒவ்வொரு நாளும் எல்லா நேரங்களும் மிகுந்த நெரிசல் ஏற்பட்டு தொடர் உபயோகத்தில் இந்த ரயில் நிலையமும், டிராம்வே பயன்பாடும் இருந்தன என்பது மிகவும் ஆச்சரியம் அளிக்கும் செய்தியாகும்!
ரயில்வே லைன் சேலம் – மேட்டூருக்கு இடையில் ஏற்படுத்தப்பட்ட பின் ஈரோட்டில் இருந்து சாலை வழியாக அதுவரை பயன்பாட்டில் இருந்த மாட்டு வண்டிகள், லாரிகள் முதலியவற்றுக்கு தேவையில்லாமல் போய்விட்டது. அதற்கு முன் மூன்று வருடங்களாக பயன்பாட்டில் இருந்த கூட் செட் எனப்படும் கட்டிடங்கள் ஈரோட்டில் தேவையில்லாமல் கைவிடப்பட்டது.