புதுடெல்லியில் நடைபெறவுள்ள நாட்டின் 77-வது குடியரசு தின அணிவகுப்பில், ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த 26 வயதான சிம்ரன் பாலா ஒரு வரலாற்றுச் சாதனையைப் படைக்கவுள்ளார். மத்திய போலீஸ் படையின் (CRPF) உதவித் தளபதியான (Assistant Commandant) இவர், வரும் ஜனவரி 26 அன்று கடமைப் பாதையில் (Kartavya Path) நடைபெறும் அணிவகுப்பில் 140-க்கும் மேற்பட்ட ஆண் வீரர்களைக் கொண்ட படைப்பிரிவைத் தலைமை தாங்கி வழிநடத்தவுள்ளார்.
சிஆர்பிஎஃப் வரலாற்றில் ஒரு பெண் அதிகாரி, முழுமையாக ஆண்கள் மட்டுமே கொண்ட ஒரு பெரிய படைப்பிரிவை வழிநடத்துவது இதுவே முதல் முறையாகும்.
சிம்ரன் பாலா ஜம்மு காஷ்மீரின் எல்லையோர மாவட்டமான ரஜோரியைச் சேர்ந்தவர். அந்த மாவட்டத்திலிருந்து நாட்டின் மிகப்பெரிய துணை ராணுவப் படையான சிஆர்பிஎஃப்-இல் அதிகாரி நிலைக்குத் தேர்வான முதல் பெண்மணி என்ற பெருமை இவருக்கு உண்டு.
ஜம்முவின் காந்திநகரில் உள்ள அரசு மகளிர் கல்லூரியில் அரசியல் அறிவியல் பட்டம் பெற்ற இவர், விடாமுயற்சியுடன் மத்திய பொதுப்பணி ஆணையத்தின் (UPSC) தேர்வில் வெற்றி பெற்று இத்துறையில் கால் பதித்தார். இவருடைய இந்த வளர்ச்சி ஜம்மு காஷ்மீர் இளைஞர்களுக்கு, குறிப்பாகப் பெண்களுக்குப் பெரும் ஊக்கமளிப்பதாக அமைந்துள்ளது.