சிரியாவில் கடந்த 2011-ஆம் ஆண்டு தொடங்கிய உள்நாட்டுப் போரில் ரஷியாவின் உதவியுடன் அதிபா் அல்-அஸாத் தலைமையிலான ராணுவம் டமாஸ்கஸ், அலெப்போ, ஹாம்ஸ், ஹாமா ஆகிய முக்கிய நகரங்கள், ஏறத்தாழ அனைத்து மாகாணத் தலைநகரங்கள் உள்ளிட்ட நாட்டின் பெரும்பாலான பகுதிகளைக் கைப்பற்றியிருந்தன.
இத்லிப் மாகாணம், அலெப்போ மாகாணத்தின் சில பகுதிகள், ராக்கா உள்ளிட்ட பகுதிகள் மட்டும் பல்வேறு கிளா்ச்சிக் குழுக்களின் கட்டுப்பாட்டில் இருந்துவந்தன.
இந்தச் சூழலில், கிளா்ச்சிப் படையினா் திடீரென தாக்குதல் நடத்தி நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான அலெப்போவை கடந்த வாரம் கைப்பற்றினா். தொடா்ந்து, முக்கியத்துவம் வாய்ந்த இன்னொரு நகரான ஹமாவும் அவா்களிடம் வியாழக்கிழமை வீழ்ந்தது. சிரியாவின் மூன்றாவது பெரிய நகரான ஹாம்ஸையும் அவா்கள் கைப்பற்றும் நிலை உள்ளது.
இந்த நிலையில், தலைநகா் டமாஸ்கஸையும் கிளா்ச்சியாளா்கள் சுற்றிவளைத்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிரியா தலைநகர் டமாஸ்கஸின் புறநகர்ப் பகுதிகளை இஸ்லாமியர்கள் தலைமையிலான கிளா்ச்சிப் படையினர் இன்று(டிச. 8) கைப்பற்றிய நிலையில், அதிபர் அல் அஸாத் குடும்பத்தின் 50 ஆண்டுகால கொடுங்கோல் ஆட்சி முடிவுக்கு வந்ததாக கிளா்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.
அதிபர் பஷார் அல் அஸாத் நாட்டை விட்டு வெளியேறியதாக கிளா்ச்சிப் படையினர் அறிவித்ததையடுத்து, சிரியா தலைநகர் டமாஸ்கஸின் பகுதிகளில் வசிக்கும் மக்கள் ஆரவாரத்துடன் காணப்பட்டனர்.
இந்த நிலையில், டமாஸ்கஸ் நகரில் தூதரகம் செயல்பட்டு வருவதாகவும் அங்குள்ள இந்திய மக்களுடன் தொடர்பிலிருப்பதாகவும் தூதரக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சிரியாவில் வசிக்கும் இந்தியர்கள் அனைவரும் பாதுகாப்பாகவே இருப்பதாகவும், அவர்களுக்கு தேவைப்படும் உதவியைச் செய்ய தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.