இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:
“திருநங்கைகளின் நலனிற்காக சிறப்பான முறையில் பணிபுரிந்து, அவர்களுக்கு முன்மாதிரியாக திகழும் திருநங்கை ஒருவர் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழுவால் ஒவ்வொரு ஆண்டும் திருநங்கைகள் தினமான ஏப்ரல் 15ஆம் நாளில் அவர்களை சிறப்பிக்கும் பொருட்டு 2021 முதல் விருதும், ரூ. ஒரு லட்சம் காசோலையும் வழங்கப்பட்டு வருகின்றது.
கன்னியாகுமரி மாவட்டம் தோவாளையைச் சேர்ந்த திருநங்கை சந்தியா தேவி அவர்கள் பூ கட்டும் தொழில் செய்து வாழ்க்கையை நடத்தி வருகிறார். வில்லிசையில் ஆர்வம் ஏற்பட்டு புராணக் கதைகளை படித்து தன் தனித் திறமையால் 1000-க்கும் மேற்பட்ட வில்லிசை நிகழ்ச்சிகளை தமிழ்நாடு மற்றும் கேரளத்தில் நடத்தியுள்ளார்.
வரதட்சணை தடுப்பு, கரோனா விழிப்புணர்வு, சமூக நலத் திட்டங்கள், பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்டவை குறித்து விழிப்புணர்வு நடத்தி வருகிறார்.