காரைக்குடி: சிறப்பு சார்பு-ஆய்வாளர் கொலை வழக்கில் குற்றவாளியை என்கவுண்டர் செய்தது மாபெரும் தவறு என சிவகங்கை எம்பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார்.
காரைக்குடியில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “அடிக்கடி தேர்வு நடத்துவது மாணவர்களுக்கு மனஅழுத்தத்தை ஏற்படுத்தும். பத்தம் வகுப்பு, பிளஸ் 2-வுக்கு மட்டும் பொதுத்தேர்வு நடத்துவதே சரியானது. தேர்தல் ஆணையம் அரசுக்கு அப்பாற்பட்ட அமைப்பு. அது நடுநிலையாக செயல்படுகிறதா? என்பதே தற்போது கேள்விக்குறியாக உள்ளது. ராகுல்காந்தி ஒரு தொகுதியில் எப்படி அதிக வாக்காளர்கள் சேர்த்துள்ளனர் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளை புள்ளி விவரங்களுடன் கூறியுள்ளார். தேர்தல் முடிவுகள் உண்மையானது தானா என சந்தேகிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
ராகுல்காந்தி கூறிய குற்றச்சாட்டுக்கு பதில் அளிக்காமல் தேர்தல் ஆணையம் பொறுப்புகளை தட்டிக் கழிக்கிறது. தேர்தல் ஆணையம் மவுனம் காப்பது இந்திய ஜனநாயகத்திற்கு ஆபத்தானது. அரசியல் சாசனமே கேள்விக்குறியாகி உள்ளது. தேர்தல் ஆணையம் மீது குற்றச்சாட்டு வைத்தால் எதற்கு பாஜகவினர் பதில் கூறுகின்றனர் என்று தெரியவில்லை.
வாக்குப்பதிவு இயந்திரத்தின் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. வாக்காளர் பட்டியலில் மட்டுமே சந்தேகம் உள்ளது. இந்தியா மீது அமெரிக்கா விதித்த கூடுதல் வரியால் அமெரிக்கர்களுக்கும் பாதிப்பு தான். இப்பிரச்சினை விரைவில் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்படும் என நம்புகிறேன். அமெரிக்கா இந்தியாவிற்கு ஆதரவாக இருக்கும் என்று பாஜக நினைத்தது தவறு. பாஜகவுக்கு வெளிநாட்டு தலைவர்களிடம் எப்படி பழகி, காரியம் சாதிக்க வேண்டும் என்ற திறமை இல்லை.
சிறப்பு சார்பு-ஆய்வாளர் கொலை வழக்கில் குற்றவாளியை கைது செய்து நீதிமன்றம் மூலம் தண்டனை வாங்கி கொடுக்காமல், என்கவுண்டர் செய்தது மாபெரும் தவறு. என்கவுண்டர் செய்ததால் என்ன நடந்தது என்று தெரியாமல் போகும். அது உண்மையை மறைப்பதாகும். ஏற்கெனவே 3 தேர்தல்களில் பழனிசாமி தலைமையிலான அதிமுக தோல்வியை சந்தித்து தான் சரித்திரம். வருகிறது 2026 தேர்தலும் அதுபோல் தான் அமையும். தமிழகத்தின் இரட்டை இலக்கு பொருளாதார வளர்ச்சியை வாழ்த்த வேண்டும். அனைத்து பகுதிகளுக்கும் வளர்ச்சி சென்றடைய வேண்டும்” இவ்வாறு அவர் கூறினார்.