சென்னை: கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக சிறப்பு புலனாய்வுக் குழுவின் முக்கிய ஆவணங்கள் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கும் நிலையில், திமுக அரசு எதை மறைக்கப் பார்க்கிறது என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: கரூர் கூட்ட நெரிசல் தொடர்பான சிறப்பு புலனாய்வுக் குழுவின் முக்கிய ஆவணங்கள் தீயிட்டு எரிக்கப்பட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளன. இது மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. மனதில் பல கேள்விகளையும் எழுப்புகிறது.
விசாரணை முடியும் முன்பே வழக்கு தொடர்பான காகிதங்களை அழிக்க அனுமதி தந்தது யார், விசாரணை நடத்தப்பட்ட இடத்திலேயே பென்-டிரைவையும் எரிக்கும் அளவுக்கு அப்படி என்ன நிர்ப்பந்தம் ஏற்பட்டது? அவசர கதியில் சிறப்பு புலனாய்வுக் குழு நியமிக்கப்பட்டதை சுட்டிக்காட்டி, அதற்கு உச்ச நீதிமன்றம் தடைவிதித்த உடனேயே ஆவணங்கள் அழிக்கப்பட்டது ஏன் அந்த ஆவணங்களை அழிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றமோ, ஏதேனும் சட்டமோ கூறுகிறதா விசாரணை முடியும் முன்னரே சிறப்பு புலனாய்வுக் குழுவினர் முதல் அரசு அதிகாரிகள் வரை ஒருதலைபட்சமான கருத்துகளை ஆர்வமாக தெரிவித்த நிலையில், தற்போது ஆவணங்கள் எரிக்கப்பட்டது எதை மறைக்க, யாரை காப்பாற்ற? கரூர் துயரச் சம்பவத்தில் சிபிஐ விசாரணைக்கு திமுக அரசு முதலில் மறுத்தது, சட்டப்பேரவை வளாகத்தில் அமைச்சர்கள் அவசர கதியாக மாற்றி மாற்றி கருத்துகளை தெரிவித்தது, தற்போது ஆவணங்கள் எரிக்கப்பட்டது என, இவை அனைத்தும் திமுக அரசு எதையோ மறைக்க முயற்சிப்பதையே சுட்டிக் காட்டுகின்றன.
உண்மை எப்போதும் உறங்காது. தமிழக பாஜக உறங்கவும் விடாது. எனவே, வழக்கம்போல வாய்ப்பூட்டு அணிந்து திசைதிருப்பு நாடகங்களில் ஈடுபடாமல், ஆவணங்கள் எரிக்கப்பட்டது தொடர்பாக திமுக அரசு உடனடியாக விளக்கம் அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.