சிறுசேரியில் 50 ஏக்கரில் நகர் வனம்: 19 நீர்நிலைகள், 3 ஆயிரம் மரங்கள் நட வனத்துறை திட்டம் | Urban forest in 50 acres in Sirucheri: 19 water bodies, 3 thousand trees planted by Forest Department

1334251.jpg
Spread the love

சென்னை: சென்னையை அடுத்த சிறுசேரியில் 50 ஏக்கரில் 19 நீர்நிலைகளை ஏற்படுத்தி, 3 ஆயிரம் மரக்கன்றுகளை நட்டு நகர் வனம் அமைக்க வனத்துறை திட்டமிட்டுள்ளது.

தமிழகத்தில் கல்வி, வேலைவாய்ப்புக்காக மக்கள் நகர்ப்புறங்களுக்கு வருவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது 40 சதவீதத்துக்கும் மேற்பட்ட மக்கள்தொகை நகர்ப்புறங்களில் உள்ளது. பிற மாநிலங்களை விட தமிழகத்தில் நகர்ப்புறங்களில் வசிக்கும் மக்கள் அதிகமாக உள்ளனர். ஆனால் மக்கள்தொகைக்கு ஏற்ப வனப்பரப்பு விரிவடையவில்லை. நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இந்நிலையில், நகர்ப்புற பசுமையை அதிகரிக்கும் வகையில் வனத்துறை சார்பில் ரூ.5 கோடியில் சென்னை அடுத்த சிறுசேரியில் 50 ஏக்கர் பரப்பில் நகர்வனத்தை அமைக்க வனத்துறை திட்டமிட்டுள்ளது.

இது தொடர்பாக வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:“பெருநகர வளர்ச்சி குழும அமைச்சர் பி.கே.சேகர்பாபு, கடந்த ஆண்டு சட்டப்பேரவையில், சிறுசேரியில் ரூ.5 கோடியில் நகர்வனம் அமைக்கப்படும் என அறிவித்திருந்தார். அதன்படி, நகர் வனம் அமைக்க டெண்டர் கோரப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் சிறுசேரியில் 50 ஏக்கர் பரப்பளவில் 3 ஏக்கர், 2 ஏக்கர் பரப்பளவில் தலா ஒரு பெரிய குளங்கள், 2.5 ஏக்கர் பரப்பளவில் 17 சிறு குளங்கள் அமைக்கப்பட உள்ளன.

பெரிய குளத்தில் 80 சென்ட் பரப்பளவில் மண் குன்று 10 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட உள்ளது. 50 இடங்களில் பொதுமக்கள் அமர்வதற்கான இருக்கைகளும், குழந்தைகள் விளையாடும் பகுதி, திறந்தவெளி உயற்பயிற்சி கூடம் போன்றவையும் அமைக்கப்பட உள்ளன.

இந்த பகுதியில் வில்வம், புங்கன், பனை, பூவரசு, ஆலமரம், அரச மரம், இலுப்பை உள்ளிட்ட 77 வகைகளை சேர்ந்த 3 ஆயிரம் மரங்கள் மரங்கள் நடப்பட உள்ளன. ஆவாரம், எருக்கன்செடி, காட்டாமணக்கு, நொச்சி உள்ளிட்ட 36 வகைகளை சேர்ந்த 3 ஆயிரம் புதர் செடிகள், குப்பைமேனி, நாயுருவி போன்ற 7 ஆயிரத்து 500 சிறு தாவரங்கள், மந்தாரை, மஞ்சள் கொன்றை, செங்கொன்றை, மயில் கொன்றை உள்ளிட்ட 25 வகையான 500 பூச்செடிகள் நடப்பட உள்ளன.

மேலும், வேம்பு, பிரண்டை, ஆடாதொடை, எட்டி ரம், நாவல் மரம், 25 வகையான 250 மூலிகைச் செடிகள் கொண்ட மூலிகை பூங்கா அமைக்கப்படும். உயிரி தடுப்பு வேலிகள், 10,110 செடிகளை கொண்டு அமைக்கப்பட உள்ளன. நவ கிரக தாவரங்கள் அடங்கிய பூங்காவும் அமைக்கப்படும். இதன் மூலம் நகர பசுமை பரப்பு அதிகரிப்பதுடன், நகரப்புற மக்களின் பொழுது போக்கு பூங்காவாகவும் திகழும்.” என்று அதிகாரிகள் கூறினர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *