சிறுபான்மையினருக்கு எதிராக பல திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருவதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
இதனால்தான் தேர்தலில் பாஜகவை சிறுபான்மை அரசாக்கியிருக்கிறார்கள் மக்கள் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
திமுக சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவு சார்பில் சென்னை பெரம்பூரில் இன்று (டிச. 23) நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டார்.
நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது,
சமத்துவத்தைப் போற்றுவதுதான் திராவிட மாடல்; திராவிட மாடல் என்றால் என்ன என்று கேட்பவர்களுக்கு இதுவே பதில்.
எந்த மதமாக இருந்தாலும் அன்பையும் சகோதரத்துவத்தையும் போதிக்க வேண்டும். இறைவனை வேண்டுவது அவரவர் விருப்பம்; எதிலும் பாகுபாடு காட்டக்கூடாது.
தமிழகத்தில் 37 தேவாலயங்களை புனரமைக்க ரூ.1.63 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஜெருசலேம் புனித பயணம் செல்வோருக்கு ரூ. 37,000 நிதி நேரடியாக வழங்கப்படுகிறது.
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நின்றது திமுக; ஆதரவு தெரிவித்தது அதிமுக. சிறுபான்மையினருக்கு எதிராக பல திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.
அதனால்தான் தேர்தலில் பாஜகவை சிறுபான்மை அரசாக்கியிருக்கிறார்கள் மக்கள். நலத்திட்டங்களை நிறைவேற்றுவதால்தான் மக்கள் நல அரசாக இது திகழ்கிறது.
நாள்தோறும் நலத்திட்டங்கள், திறப்பு விழாக்கள் என அரசு பல திட்டங்களை நிறைவேற்றி வருகிறது என முதல்வர் பேசினார்.
இதையும் படிக்க | அரசுப் பள்ளி மாணவர்களின் உயர்கல்விச் செலவை அரசே ஏற்கும்: அரசாணை