மனிதநேய மக்கள் கட்சியில் இருந்த மு.தமிமுன் அன்சாரி, 2011 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார். 2015-ல் அந்த கட்சியில் இருந்து விலகி மனிதநேய ஜனநாயக கட்சியை (மஜக) தொடங்கிய தமிமுன் அன்சாரி, 2016 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் நாகப்பட்டினம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
2019 மக்களவை தேர்தலில் பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்ததால், அதிமுக கூட்டணியில் இருந்து விலகினார். அந்த தேர்தல் மட்டுமின்றி, 2021 சட்டப்பேரவை தேர்தல், 2024 மக்களவை தேர்தல் மற்றும் வரவுள்ள 2026 சட்டப்பேரவை தேர்தலிலும் திமுக கூட்டணியில் பயணிக்கும் தமிமுன் அன்சாரி ‘இந்து தமிழ் திசை’க்காக அளித்த சிறப்பு பேட்டி:
எதிர்க்கட்சிகள் சொல்வதைப் போல் திமுக அரசு சட்டம் ஒழுங்கை பாதுகாக்க தவறி விட்டது, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்பதை ஏற்கிறீர்களா?
எல்லா மாநிலங்களிலும் எதிர்க்கட்சிகள் சொல்வது சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது என்பது தான். ஆனால், தமிழகத்தில் மக்கள் அமைதியாக உள்ளனர். மக்களின் அன்றாட வாழ்வுக்கு எவ்வித பங்கமும் நேர்வதில்லை. பெண்கள் அச்சமின்றி வெளியே சென்றுவிட்டு வீட்டுக்கு வருகின்றனர். மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை ஒன்றன் பின் ஒன்றாக திமுக நிறைவேற்றி வருகிறது. இன்னும் 6 மாதம் இருப்பதால், மீதமுள்ள வாக்குறுதிகளையும் திமுக நிறைவேற்றும் என்ற நம்பிக்கை மக்களுக்கு இருக்கிறது.
திமுகவை ஆதரிக்கும் சிறுபான்மை மக்களின் கோரிக்கைகள் அனைத்தும் இந்த ஆட்சியில் நிறைவேற்றப்பட்டுள்ளதா?
சிறுபான்மை, பெரும்பான்மை மக்கள் இடையே நல்லிணக்கம் நிலவ வேண்டும் என்ற அடிப்படையில் திமுக ஆட்சி நடத்தி வருகிறது. மனுக்களை கொடுக்கிறோம். அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. சிறுபான்மை மக்களின் ஒரே நோக்கம் என்பது, அவர்கள் கல்வியிலும், பொருளாதாரத்திலும் முன்னேற வேண்டும் என்பதுதான். அதற்கு இடஒதுக்கீட்டை கொடுத்தது திமுக. அந்த இடஒதுக்கீட்டை உயர்த்தி தர வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக உள்ளது. அதனை நாங்களும் வலியுறுத்தி வருகிறோம்.
அதிமுகவில் இருந்து முக்கிய நிர்வாகிகள் வெளியேறுவதையும், நீக்கப்படுவதையும் எப்படி பார்க்கிறீர்கள்?
டெல்லியில் இருப்பவர்களின் உத்தரவுகளுக்கு ஏற்ப செயல்படுவதால், அந்த கட்சியில் அடுத்தடுத்து குழப்பங்கள் ஏற்படுகிறது. இதனால், அந்த கட்சியில் உள்ள உண்மை தொண்டர்கள் விரக்தியில் உள்ளனர். இதே நிலை தொடர்ந்தால் அதிமுக தனது அரசியல் இருப்பை இழக்க நேரிடும். அது தமிழகத்துக்கும் அதிமுகவுக்கும் நல்லதல்ல.
தமிழகத்தில் வரவுள்ள சட்டப்பேரவை தேர்தலில் நீங்கள் எத்தனை இடங்கள் கேட்க திட்டமிட்டுள்ளீர்கள்? அப்படி கேட்கும் இடங்கள் கொடுக்காத பட்சத்தில் மீண்டும் அதிமுக பக்கம் செல்ல வாய்ப்புள்ளதா?
இடப்பங்கீடு பேச்சுவார்த்தைக்கு அழைக்கும்போது, எங்களுடைய கோரிக்கையை கொடுப்போம். 2019 மக்களைவை தேர்தல், 2021 சட்டப்பேரவை தேர்தல், 2024 மக்களவை தேர்தலில் இடங்கள் கிடைக்கவில்லை என்றாலும் திமுக கூட்டணிக்கு நாங்கள் கடுமையாக உழைத்தோம். இந்த முறை முதல்வர் மு.க.ஸ்டாலின், எங்களுக்கு உரிய அங்கீகாரத்தை வழங்குவார் என்ற நம்பிக்கை உள்ளது. கொள்கை ரீதியாக திமுக கூட்டணியில் இருக்கிறோம். மீண்டும் அதிமுக என்ற பேச்சுக்கு இடமில்லை.
தமிழகத்தில் வரவுள்ள தேர்தலில் சிறுபான்மை மக்கள் எந்த விஷயத்துக்கு முக்கியத்துவம் அளித்து வாக்களிப்பார்கள்?
பாசிசம் தலை விரித்தாடும் நிலையில், அதனை எதிர்ப்பது தான் கடமை. பாசிசத்தை வீழ்த்த சிறுபான்மை மக்கள் வாக்களிப்பார்கள்.
சிறுபான்மை மக்களுக்கு திமுக உள்ளிட்ட தமிழக அரசியல் கட்சிகள் போதுமான முக்கியத்துவம் அளிக்கிறதா?
ஒவ்வொரு அரசியல் கட்சியும் முஸ்லீம் மட்டுமின்றி ஒவ்வொரு சமூகத்துக்கும், அவர்களுடைய மக்கள் தொகைக்கு ஏற்ப தேர்தலில் போட்டியிட வேண்டிய வாய்ப்பை வழங்க வேண்டும்.
சிறுபான்மையினரை ஓட்டு வங்கியாக அரசியல் கட்சிகள் பார்க்கும் அணுகுமுறை சரியானதா?
ஜனநாயகத்தில் ஒவ்வொரு சமூகத்தையும், அரசியல் கட்சிகள் வாக்கு வங்கிகளாக தான் பார்க்கிறார்கள். நாடுமுழுவதும் இதே நிலை தான் உள்ளது. ஆனால், அவர்களை வாக்கு வங்கிக்கு மட்டும் பயன்படுத்திவிட்டு, அந்த சமூகங்களுக்கு எதுவும் செய்யாமல் போனால், அது தவறு. தமிழகம், கேரளாவில் அவ்வாறு இல்லை. சிறுபான்மை மக்களின் வாக்குகளை பெற்று வெற்றி பெற்ற பிறகு, அவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றுகின்றனர். ஆனால், வடமாநிலங்களில் சிறுபான்மை மக்கள் வாக்கு வங்கிகளாக மட்டுமே உள்ளனர் என்பது கசப்பான உண்மை.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆர்) பற்றி உங்கள் கருத்து என்ன? இதில், சிறுபான்மையினர் வாக்குகள் அதிகம் நீக்கப்படுவதாக குற்றம்சாட்டப்படுவது உண்மைதானா? அது எப்படி?
பாஜக அரசு சிஏஏ, என்ஆர்சி, என்பிஆர் என மூன்று வகையான குடியுரிமை சட்டங்களை கொண்டு வந்தது. சிஏஏ-வை நிறைவேற்றிவிட்டனர். என்ஆர்சி-யில் மிகப்பெரிய ஆபத்து உள்ளது. அதனை அமல்படுத்துவதில், அவர்களுக்கு அதிக தடைகளும், எதிர்ப்புகளும் வந்தன. தற்போது இந்திய தேர்தல் ஆணையத்தில் வழியாக அதனை செயல்படுத்த துடிக்கிறார்கள்.
என்ஆர்சி-யின் நகல் தான் எஸ்ஐஆர். கொல்லை புறம் வழியாக அதனை அமல்படுத்த துடிக்கிறார்கள். முன்பு சிறுபான்மை மக்களின் குடியுரிமை மட்டும் தான் களவாடும் நிலை இருந்தது. இப்போது அனைத்து மக்களின் குடியுரிமை, வாக்குரிமை பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது.
திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ், தவெக தலைவர் விஜய் தலைமையிலான கூட்டணிக்கு செல்ல வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறதே. அப்படி என்றால் திமுக கூட்டணி உடைய வாய்ப்புள்ளதா?
திமுக கூட்டணி பலவீனம் அடைய வேண்டும் என்று பலரும் எதிர்பார்க்கின்றனர். இது கொள்கை ரீதியாக அமைந்த கூட்டணி என்பதால், அவர்களின் கனவு பகல் கனவாக தான் முடியும். முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும், ராகுல்காந்திக்கும் தனிப்பட்ட நட்பு நெருக்கமாக உள்ளது. அதனை யாராலும் பிரிக்க முடியாது. திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேறுவதற்கு வாய்ப்பு இல்லை.