“சிறுபான்மை மக்களிடையே திமுகவின் முகத்திரை கிழிந்து வருகிறது!” – விளாசும் வேலூர் இப்ராஹிம் நேர்காணல் | Vellore Ibrahim Interview

1381206
Spread the love

‘தடையை மீறினார்… வன்முறையைத் தூண்டினார்’ என தினமும் வித, விதமான குற்றச்சாட்டுகளை சுமத்தி, காவல்துறை வழக்கு பதிவு செய்யும் பட்டியலில் முன்னிலையில் இருப்பவர் பாஜக சிறுபான்மை அணி தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம். தமிழகத்தில் இஸ்லாமியருக்கான அடையாளங்களுடன், பாஜகவின் கொள்கைகளை எல்லா இடங்களிலும் தயக்கமின்றி எடுத்து வைக்கும் வேலூர் இப்ராஹிம் ‘இந்து தமிழ் திசை’க்கு அளித்த பேட்டியிலிருந்து…

தமிழகத்தின் ஏதாவது ஒரு பகுதிக்கு தினமும் விசிட் அடித்து, சர்ச்சையில் சிக்கி, வழக்கில் கைதாகி வருகிறீர்களே..?

பாஜக ஆட்சிக்கு வந்துவிட்டால், உங்களது வழிபாட்டுத்தலத்தை பறித்து விடுவார்கள்; அச்சுறுத்துவார்கள் என்ற பொய் பிரச்சாரத்தை திமுக இங்கு கட்டமைத்துள்ளது. இஸ்லாமியர் வாழும் பகுதிகளுக்கு சென்று, அதனை, நான் உடைக்கிறேன். இதனால், கடந்த நான்கு ஆண்டுகளில், என்மீது நூற்றுக்கும் மேற்பட்ட வழக்குகள் போடப்பட்டுள்ளன. என் குடும்பத்தினர் மீதும் வழக்குகளைப் போட்டு அச்சுறுத்துகிறார்கள்.

காவல்துறை வேண்டுமென்றே உங்கள் மீது வழக்கு பதிகிறது என்கிறீர்களா..?

திமுக ஆட்சியில் அடிப்படைவாத சக்திகள் மிகவும் வீரியமாக செயல்படுகிறார்கள். ஒரு இஸ்லாமியர், தேசியவாதியாக இருந்து, பாஜகவின் கொள்கைகளைப் பேசுவதை, இவர்களால் ஜீரணிக்க முடியவில்லை. திமுகவின் சிறுபான்மை வாக்கு வங்கியை, வேரோடு வெட்டி வீழ்த்துகிற வேலையை நான் செய்கிறபோது, என்மீது வழக்குகள் பாய்கிறது. என் மீது வழக்குப் போட வரும் காவல்துறை அதிகாரிகள், ‘மேலிடம்’ சொல்வதால் வழக்குப் பதிவதாகச் சொல்கிறார்கள். திமுகவுக்கு பெரிய அச்சுறுத்தலாக நான் இருப்பதால், என்னை முடக்க முதல்வர் ஸ்டாலின் இது போன்ற நடவடிக்கைகளை எடுக்கிறார். தேர்தல் பிரச்சாரத்திற்கு வெளியே வர விடாமல் தடுக்க என்மீது குண்டர் தடுப்புச் சட்டத்தை பிரயோகிக்கவும் வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் இஸ்லாமியர்களின் பல்வேறு பிரச்சினைகளுக்காக திமுக, விசிக, காங்கிரஸ் மற்றும் பல்வேறு இஸ்லாமிய கட்சிகள் களத்துக்கு வந்து போராடி கவனத்தை ஈர்த்து வருகின்றனவே..?

நாட்டில் எந்தச் சட்டம் வந்தாலும், அது இஸ்லாமியர்களுக்கு எதிரானது என்ற தீவிர பிரச்சாரத்தை திமுக கூட்டணியினரும், அடிப்படைவாதிகளும் தொடர்ந்து செய்து வருகின்றனர். இது குறித்து பொது மேடையில் விவாதிக்கத் தயாரா என்று கேட்டு, நான் அழைப்பு விடுத்தால், ஓடி ஒளிந்து கொள்கின்றனர்.

ஆனால், சிறுபான்மை மக்களில் பெரும்பகுதியினர் தங்களின் பாதுகாவலனாக திமுகவைத்தானே நினைக்கின்றனர்?

சிறுபான்மை மக்கள் நலனுக்காக, இந்த ஆண்டு பட்ஜெட்டில் எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டது என்று முதல்வர் ஸ்டாலின் சொல்வாரா? ஆனால், மத்திய பாஜக அரசு ரூ.3,818 கோடி ஒதுக்கி உள்ளது. கடந்த 11 ஆண்டு கால பாஜக ஆட்சியில் சிறுபான்மை யினருக்கு என்ன பாதிப்பு வந்துவிட்டது? கடந்த ஆறு மாத காலமாக, பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள், திமுகவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்து வருகின்றன.

சிறுபான்மை மக்களின் உண்மையான பாதுகாவலன் யார் என்பதை மக்கள் தெரிந்து கொண்டார்கள். எனவே, சிறுபான்மை மக்களிடையே, திமுகவின் முகத்திரை கொஞ்சம், கொஞ்சமாக கிழிந்து வருகிறது. இனிமேல் அவர்கள் ஏமாற மாட்டார்கள். திமுகவினுடைய வாக்கு வங்கிக் கனவை, இந்தத் தேர்தலில், சிறுபான்மை மக்கள் கலைப்பது உறுதி. சிறுபான்மை மக்கள் அதிகமாக வசிக்கும் தொகுதிகளில் அதிமுக – பாஜக கூட்டணியே வெற்றி பெறும்.

நீங்கள் இவ்வளவு சொன்னாலும், மத்திய அமைச்சரவையில் சிறுபான்மையினருக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லையே..?

கடந்த காலத்தில் முக்தார் அப்பாஸ் நக்வி, ஷா நவாஸ் உசேன் போன்றவர்கள் மத்திய அமைச்சர்களாக இருந்துள்ளார்கள். இந்த முறை பௌத்தம், கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்தவர்கள் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளார்கள். இந்த வரிசையில் இஸ்லாமியர்களுக்கும் பிரதிநிதித்துவம் கிடைக்கும்.

என்டிஏ கூட்டணியில் தவெக இணைய வேண்டும் என பெரிய அளவில் முயற்சிகள் எடுக்கப்படுகிறதே..?

திமுகவுக்கு எதிரான வாக்குகளைப் பிரிக்காமல், என்டிஏ கூட்டணியில் விஜய் இணைந்தால், அவரது கட்சி ஒரு மரியாதைக்குரிய இடத்திற்கு வரும்; மக்களும் பயனடைவார்கள். ஒருவேளை, எங்கள் கூட்டணிக்கு அவர் வராவிட்டால், அது அவரது கட்சிக்கும், அவருக்குமான நஷ்டமே. அவர் வராவிட்டாலும், தமிழகத்தில் என்டிஏ அணி பெரும்பான்மை பெறுவது உறுதி.

துணை முதல்வர் பதவி தருவதாக அதிமுக தலைவர்கள் விஜய்க்கு ஆசை வார்த்தை கூறுகின்றனரே..?

அது ஆசை வார்த்தை அல்ல. வெற்றிப்பாதையில் அவர் பயணிக்க வேண்டும் என்பதற்காக சொல்லப்படும் அறிவுரை. இதை விஜய் உணர்ந்து கொள்ள வேண்டும்.

தமிழகத்தில் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தத்தின் மூலம் சிறுபான்மையினர், பெண்கள் வாக்குகளை நீக்கப் போகிறார்கள் என திமுக குற்றம் சாட்டியுள்ளதே?

பிஹார் தேர்தலில், எஸ்ஐஆர் கொண்டு வரப்பட்டபோதும் இதே பொய்யைச் சொன்னார்கள். இப்போது, தமிழகத்தில் வாழும், சிறுபான்மை, பட்டியல் சமூக மக்களை அச்சுறுத்துவதற்காக முதல்வர் ஸ்டாலின் இவ்வாறு பேசுகிறார். இது கண்டனத்துக்குரியது. தமிழகத்தில் திமுக ஆட்சிதான் நடக்கிறது. சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் என்பது ரகசியமாக நடக்கப் போவதில்லை. அப்படி இருக்கையில், வாக்கை திருடப் பார்க்கிறார்கள் என்று பொய் சொல்வது எடுபடாது.

அண்ணாமலை தனி கட்சி ஆரம்பிக்கப் போகிறார் என்ற தகவல் வருகிறதே?

ஊடகங்கள் பொழுதுபோக்கிற்காக செய்யக்கூடிய விஷயங்களுக்கு நாங்கள் மதிப்பளிப்பதில்லை.

இந்த முறை உங்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்குமா?

வாய்ப்புக் கிடைக்குமா என்று ஜோசியம் சொல்ல முடியாது. ராணிப்பேட்டை தொகுதி பொறுப்பாளராக தற்போது நியமிக்கப்பட்டு, அங்கு தேர்தல் பணி ஆற்றி வருகிறேன். இந்தமுறை இஸ்லாமியர்களும், கிறிஸ்துவர்களும் சட்டமன்றத்திற்குச் செல்ல பாஜக வாய்ப்பு அளிக்கும். கட்சிக்காக உழைத்தவர்கள் என்ற அடிப்படையில் அந்த வாய்ப்பு வழங்கப்படும்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *